கச்சத்தீவின் மொத்தப் பரப்பளவு 285 ஏக்கர் 20 சென்ட் ஆகும். ராமேஸ்வரத்தில் இருந்து 17 கி.மீ. (12 நாட்டிக்கல் மைல்) உள்ளது. நல்ல மீன் வளம் நிறைந்த கச்சத் தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் தடையின்றி மீன் பிடித்து வந்தனர்.
இந்த நிலையில் 28-6-1974 அன்று கச்சத்தீவை இலங்கைக்கு அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி தாரை வார்த்துக் கொடுத்தார். அதுவும் தமிழகத்தின் ஒப்புதலைப் பெறாமலே.
இதன் மூலம் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை இந்திய (தமிழக) மீனவர்கள் இழந்தனர். அதுவரை தலைவலியாக இருந்த இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து இன்றைக்கு திறுகுவலியாக மாறி தீர்வே இல்லை என்ற நிலை நீடிக்கிறது.
இதற்கிடையில் மீண்டும் கச்சத்தீவை மீண்டும் மீட்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. இதற்கு எந்த கட்சியும் தடையாக நிற்கவில்லை; நிற்கவும் முடியாது.
ஏன், மத்தியில் ஆளும் கட்சியான பாஜக கூட, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது. நேற்று கூட தமிழக பாஜக தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன், விரைவில் கச்சத்தீவு இந்தியாவுடன் இணையும்
என்று தெரிவித்து இருக்கிறார்.
ஈழத் தமிழர்களுக்கு இலங்கை அரசு பெரும் கொடுமைகள் செய்திருந்தபோதும், அவற்றை எல்லாம் மறந்து, அந்நாடு பொருளாதாரத்தில் தத்தளிக்கும் நிலையில் மனிதாபிமானத்துடன் உதவி செய்து வருகிறது இந்தியா.
இருநாடுகளின் நல்லுறவை கெடுத்து வரும் கச்சத்தீவு பிரச்சினையில் தலையிட்டு, கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசு முன்னின்று முயற்சிக்க வேண்டிய தருணம் இது. தமிழக அரசும் அழுத்தம் தரவேண்டும். கச்சத்தீவை மீட்கும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கலாம்.
கச்சத்தீவு இந்தியாவின் சொத்து என்பதற்கான ஆதாரங்கள் ஏராளம் இருக்கின்றன. கச்சத்தீவு மீண்டும் நம் கைக்கு வந்தால் தான் தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
அதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசும் தமிழக அரசும் ஒருங்கிணைந்து உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
தமிழக மீனவர் நலன் காக்க, கச்சத்தீவை மீட்டெடுப்போம்!