இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து இருப்பதால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந் தோர் எண்ணிக்கை 4.79 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.47 கோடியை தாண்டியது. புதிதாக 6,650 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,47,72,626 ஆக உயர்ந்தது.
புதிதாக 374 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந் தோர் எண் ணிக்கை 4,79,133 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 7, 051 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,42,15,977 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது.
அதில் 114 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் கொரோனா 2ம் அலை வராமல் தடுக்க தேர்தல் பரப்புரைகளை ரத்து செய்வதுடன் தேர்தல்களை ஓரிரு மாதங்கள் தள்ளி வைக்குமாறும் தேர்தல் ஆணையத்தை அலகாபாத் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் மனு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓமைக்ரான் பரவலுக்கு இடையே வழக்கறிஞர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நடத்தும் பொது கூட்டங்கள், பேரணிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்றும் அலகாபாத் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
நாட்டு மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி வழங்குவதில் முனைப்பு காட்டி வரும் பிரதமர் மோடியை பாராட்டிய நீதிபதிகள், தேர்தல் பரப்புரை கூட்டங்களை அவர் ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும் தேர்தல்களை ஓரிரு மாதங்கள் தள்ளி வைக்க அறிவுறுத்திய நீதிபதிகள், பரப்புரைகளை ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.



