fbpx
Homeதலையங்கம்இட்லி ஏடிஎம்- வரவேற்போம்!

இட்லி ஏடிஎம்- வரவேற்போம்!

பொதுவாக ஏடிஎம்களில் பணம் மட்டும்தான் வரும் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இனி இட்லி வாங்க வேண்டுமென்றால் ஓட்டலுக்கு சென்று காத்திருந்து வாங்க வேண்டியதில்லை.

ஏடிஎம்மில் பணம் போட்டால் தானாகவே இட்லி மற்றும் அதற்கு தொட்டுக்கொள்ள சட்னி வருகிறது. இந்த வித்தியாசமான ஏடிஎம் பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆச்சரியப்பட வைத்ததோடு மிகப் பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்த தானியங்கி இட்லி தரும் இயந்திரம் ஆன்லைனில் உலகளாவிய பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த இயந்திரத்திலிருந்து இட்லிகள் எப்படி தயாராகிறது? அவை சுவையாகவும் தரமாகவும் உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

பலர் இட்லி ஏடிஎம்&ற்கு வரவேற்பை அளித்து வருகின்றனர். வீட்டு இட்லியை விட சுவை குறைவாக உள்ளதாகவும் விலை சற்று அதிகமாக இருப்பதாகவும் சிலர் எதிர் கருத்தைப் பதிவு செய்துள்ளனர்.

உலகே வியக்கும் அளவிற்கு இட்லி ஏடிஎம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு, தற்போது சுட்டிக்காட்டப்படும் சின்னசின்ன குறைகளை நிவர்த்தி செய்து மேம்படுத்துவது என்பது முடியாத காரியமல்ல.

இட்லி என்பது நம்நாட்டு பாரம்பரிய உணவுகளில் அதிமுக்கிய இடம் பிடித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இட்லி இல்லா காலை- இரவு உணவுப்பட்டியல் இருக்காது.

அதனால் தான் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் இந்தியா வந்தால் மணக்கும் சாம்பார், சட்னியுடன் இட்லியை உண்ணாமல் இருக்க மாட்டார்கள். இதற்கென பெயர்பெற்ற ஓட்டல்களும் நம்மூர்களில் உண்டு.

தற்போது இந்த இட்லி ஏடிஎம்களை வெளிநாடுகளில் நிறுவும்போது அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. வெளிநாடுகளில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் மால்கள் மற்றும் முக்கிய இடங்களில் இட்லி ஏடிஎம்கள் நிறுவப்பட வேண்டும்.

இட்லி மட்டுமல்ல பிற இந்திய உணவுகளை வழங்கும் ஏடிஎம்களையும் தயாரித்து வழங்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இது ஒரு கலாச்சார ஏற்றுமதியாக மாறுவதும் விரைவில் நிகழத்தான் போகிறது.

பெங்களூரு ஸ்டார்ட்அப் நிறுவனம் தயாரித்த இந்த இட்லி ஏடிஎம் உண்மையிலேயே மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றும் அதிகளவு இயந்திரங்களைத் தயாரித்து விரைவில் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பெரிதும் பாராட்டி வாழ்த்தி உள்ளார்.

உடலுக்கு நலம் தரும் நம்நாட்டு உணவான இட்லி தரும் ஏடிஎம் மையங்கள் பரவலாக நிறுவப்படும் என்பதில் ஐயமில்லை.

வரவேற்போம்!

படிக்க வேண்டும்

spot_img