fbpx
Homeதலையங்கம்அமித்ஷா - இபிஎஸ் சந்திப்பின் மர்மம்!

அமித்ஷா – இபிஎஸ் சந்திப்பின் மர்மம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் சந்தித்துப் பேசி உள்ளனர். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து மாறுபட்ட தகவல்கள் கசிந்தபடி உள்ளது.

தன்னுடன் உள்கட்சி விவகாரம் குறித்து பேசக்கூடாது என அமித்ஷா கண்டிஷன் போட்டதாகவும் இபிஎஸ்-ஐ பிரதமர் மோடி சந்திக்க மறுத்து விட்டதாகவும் முதலில் தகவல் வெளியானது.

அமித்ஷாவுடனான சந்திப்புக்குப் பின்னர், இபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசும்போதும், அமித்ஷாவுடன் அரசியல் பேசவில்லை என்றும் கோதாவரி & காவிரி இணைப்பு திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரினேன் என்றும் தெரிவித்தார்.

ஆனால் இது நம்பும்படியாக இல்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. அதிமுக பிளவு விவகாரம், அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து நடத்தப்படும் ரெய்டு பற்றி முக்கியமாகப் பேசி இருக்கிறார்கள் என இன்னொரு தகவல் கூறுகிறது.

அப்போது ஓபிஎஸ் && இபிஎஸ் இணைந்தே செயல்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்று அமித்ஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆனால் அதனை ஏற்க மறுத்த இபிஎஸ், இனி ஓபிஎஸ் உடன் இணைந்து பணியாற்ற இயலாது என்றும் அதிமுகவின் பலம் முழுவதும் தன்பக்கமே இருப்பதாக எடுத்துரைத்து விளக்கியதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

ஆக, அமித்ஷா & இபிஎஸ் சந்திப்பில் வெளிப்படைத்தன்மை இல்லாத மர்மம் உள்ளது. உண்மையில் என்ன பேசினார்கள் என்பது அவர்கள் இருவருக்கு மட்டுமே வெளிச்சம். ஒன்று மட்டும் நிச்சயம். அது என்ன?

இபிஎஸ் தரப்பை பாஜக முழுமையாக ஏற்றுக் கொள்ளவுமில்லை; ஓபிஎஸ்&க்கு கதவை மூடிவிடவுமில்லை. ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே நீதிமன்றங்களின் கதவுகளையும் தேர்தல் ஆணையத்தின் கதவுகளையும் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

இறுதி முடிவுகள் எப்போது கிடைக்கும்?. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படுமா? என்றெல்லாம் கேள்விகள் நீண்டு கொண்டே போகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை இதே நிலை நீடித்தால்…

அதிமுக கதி என்னவாகும்?

படிக்க வேண்டும்

spot_img