fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் திருப்பூர் மாவட்ட மக்கள் நெஞ்சார்ந்த நன்றி!

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் திருப்பூர் மாவட்ட மக்கள் நெஞ்சார்ந்த நன்றி!

திருப்பூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் கடந்த மே 7-ம் தேதி முதல் அக்டோபர் 17-ம் தேதி வரை 7,226 பேர் ரூ.30 கோடியே 57 லட்சம் மதிப்பில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இத்திட்டத்தில், ஒரு குடும்பத்திற்கு வருடம் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை வழங்கப்படுகிறது. 7,16,398 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் தெரிவித்தார்.

“நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”
என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் முக்கிய நோக்கம் ஏழை, எளிய மக்கள் தரமான உயர் சிகிச்சையை கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளை அரசு மற்றும் தகுதி வாய்ந்த தனியார் மருத்துவமனை மூலம் செயல்படுத்துவதாகும்.

தகுதி வாய்ந்த நபர்களின் குடும்ப உறுப்பினர் அனைவரும் இத்திட்ட காலம் முடியும் வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைக்கு உட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினால், பெரு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்களுக்கு உயர் சிகிச்சை பெற்று குணமடைந்து பல லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

1,451 சிகிச்சைகள்
திருப்பூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் குறித்து, மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் தெரிவித்ததாவது:

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு வருடம் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு ஓர் ஆண்டுக்கு 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் வழங்கப்படுகிறது.

பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட்ட 1,451 சிகிச்சை முறைகளுக்கும், 116 தொடர் சிகிச்சை வழி முறைகளுக்கும் மற்றும் 23 நோய் அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் இத்திட்டத்தின் மூலம் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சை சம்பந்தபட்ட பரிசோதனைகளுக்கும், காப்பீட்டு திட்டத்திற்காக வரையறுக் கப்பட்ட தொகையில் அடங்கும். அறுவை சிகிச்சை தேவைப்படாத பட்சத்தில் செலவிட்ட கட்டணத் தொகை வழங்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.
எதற்கெல்லாம் பெறலாம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவை சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம், முடநீக்கு அறுவை சிகிச்சை, கண் நோய் சிகிச்சை, காது மூக்கு தொண்டை சம்பந்தமான சிகிச்சைகள், கர்ப்பப்பை நோய்கள், நுரையீரல், சிறுநீரக நோய்கள், மூளை மற்றும் நரம்பு மண்டல நோய்கள் ரத்த குறைபாடு, தொற்றுநோய், தோல் வியாதி, ரெமாடோலஜி, ஹார்மோன் சமபந்தப்பட்ட நோய்கள், ஒட்டுஉறுப்பு அறுவை சிகிச்சை, இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை, ரத்த குழாய் அறுவை சிகிச்சைகள், பொதுவான அறுவை சிகிச்சை ஆகிய துறை சார்ந்த முக்கிய சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.

ஈரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, குறுந்தனு மாற்று அறுவை சிகிச்சை, காது குறுத்தெலும்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு சிறப்பு சிகிச்சைகளும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

38 மருத்துவமனைகள்
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மற்றும் தாராபுரம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம், ஊத்துக்குளி ஆகிய 8 அரசு மருத்துவமனைகள் மற்றும் 28 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் திருப்பூர் மாவட்டத்தில் 36 மருத்துவமனைகளில் முதலமைச் சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரி வான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 7,16,398 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் கடந்த மே 7-ம் தேதி முதல் அக்டோபர் 17-ம் தேதி வரை 7,226 பேர் ரூ.30 கோடியே 57 லட்சம் மதிப்பில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் அடையாள அட்டை எடுக்காதவர்கள் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கும் கீழ்) ஆகிய ஆவணங்களை தயார் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரை தளம் அறை எண்.3-ல் வேலை நாட்களில் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் தெரிவித்தார்.

‘பணம் இல்லாததால்
சிகிச்சை பெறவில்லை’
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயனடைந்த கிருஷ்ணவேணி கூறியதாவது: நாங்கள் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் கரடிப்பாறை பகுதியில் வசித்து வருகிறோம்.

கணவர் நெசவு கூலித் தொழில் செய்து வருகிறார். எனக்கு திடீ ரென மாரடைப்பு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு மருத்துவ செலவிற்காக அதிக கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

எங்களிடம் போதிய அளவு பணம் இல்லாத காரணத்தால், அங்கு சிகிச்சை வழங்க இயலாது என்று தெரிவித்தனர். இதனால் வேறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு பிரிவில் ஆலோசனை வழங்கினர். அவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை மேற்கொண்டோம்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 85 ஆயிரம் ரூபாய் எனது சிகிச்சைக்காக தமிழக அரசு செலுத்தியது. இதனால் நான் நான்கு நாட்களிலேயே அறுவை சிகிச்சை முடிந்து முழு உடல் ஆரோக்கியத்துடன் வீட்டுக்கு திரும்பினேன்.

எங்களைப் போன்றவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளித்து, மறுவாழ்வு தந்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

‘ஒரு வார காலத்தில் வலிக்கு நிவாரணம்’
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயனடைந்த அபு ரோஜா நூர் முகமது கூறியதாவது:

‘தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் எனது சொந்த ஊர். கணவரும், நானும் குடும்பத்தினருடன் திருப்பூரில் தங்கி இருந்து தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

எனக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தேன். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சென்றபோது, பெரிய அளவில் தொகை செலுத்த வேண்டியிருந்தது.

இதனால் சிகிச்சை மேற்கொள்ளாமல் வேதனையுடன் வீடு திரும்பினோம். அத்தகைய சூழ்நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் பற்றி நண்பர்கள் மூலம் அறிந்தேன்.

உடனடியாக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகினோம். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து தெரிந்து கொண்டு அதே மருத்துவமனையில், அத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றேன்.

சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஒருவார காலம் தங்கி சிகிச்சை முடிந்து இப்போது எந்தவிதமான வலியும் இன்றி நலமாக இருக்கிறேன். எங்களைப் போன்ற ஏழை, எளிய மக்களின் உயிர் காத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நீண்ட ஆயுள், நிறைந்த உடல் நலம் பெற்று என்றென்றும் நல்லாட்சி தர வேண்டும்’ என்றார் மகிழ்ச்சியுடன்.

“தரமான மருத்துவ சேவையை அனைத்து மக்களும், குறிப்பாக ஏழை, எளிய மக்கள் பெற்றிட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக முதல்வர் அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, நவீன மருத்துவ கருவிகளை வழங்கி சிறப்பான மருத்துவ சேவையினை வழங்கி வருகிறார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் மேலும், ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்’ மற்றும் ‘வருமுன் காப்போம் திட்டம்’ போன்ற மக்களுக்கு ஆரோக்கியமான சமுதாயத்தை அமைத்திட இத்தகைய சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அரசு மருத்துவமனைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருப்பதையும், மருத்துவர்களும், ஏனைய சுகாதார பணியாளர்களும், தன்னலமற்ற சேவை புரிவதை உறுதிப்படுத்துவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நோக்கமாக கொண்டு செயல்படுத்தி வருகிறார்.

உயர் மருத்துவம் அடித்தட்டு மக்களுக்கும் இன்று எளிமையாக கிடைக்கப்பெறுவது முதல்வரின் வெற்றிச் சாதனை என்றால் அது மிகையாகாது”.

வெளியீடு:
செ.கு.சதீஷ்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திருப்பூர் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img