தமிழக அரசு புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்திற்கு 2021- 22-ம் ஆண்டுக்கு 155 பேருக்கு ரூ.15.20 கோடி மானியத்துடன் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், தற்போது வரை 50 பேருக்கு ரூ.15.31 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் தெரிவித்தாவது:
படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (ஹிசீணிநி) கீழ் துவக்கப்படும் தொழில்களுக்கு 25 சதவித மூலதன மானியத்துடன் வங்கிக்கடன் வழங்கும் திட்டம், திருப்பூர் மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 18 வயதுக்கு மிகைப்பட்டவராகவும், பொதுப்பிரிவினரா யின் 35 வயதுக்கு மிகைப்படாதவராகவும், சிறப்புப்பிரிவினராயின் 45 வயதுக்கு மிகைப்படாதவராகவும் இருக்க வேண்டும்.
இதில் முதலீட்டாளரின் பங்கு பொதுப்பிரிவினருக்கு 10 விழுக்காடும், சிறப்பு பிரிவினருக்கு 5 விழுக்காடும் ஆகும். சிறப்பு பிரிவினர் என்பது பட்டியல் இனம், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் திருநங்கை ஆகியோராவர்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் படி ரூ.15 இலட்சம் வரை திட்ட முதலீட்டில் உற்பத்தி தொழில்கள் துவங்கிடவும், ரூ.5 இலட்சம் வரை திட்ட முதலீட்டில் சேவை, வியாபாரம் தொழில்கள் துவங்கிடவும் கடன் வழங்கப்படுகிறது.
அதிகபட்ச மானியமாக ரூ.2.5. இலட்சம் வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மார்ச் 2021 வரை பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
400 பேருக்கு 400 இலட்சம் மானியத்துடன் கடன்
இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்திற்கு 2021- 22-ம் ஆண்டுக்கு 400 நபர்களுக்கு ரூ.400 இலட்சம் மானியத்துடன் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை 71 பேருக்கு ரூ.90 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து, அவர்களை முதல் தலைமுறை தொழில்முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம் (NEEDS) என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, ஐ.டி.ஐ, பட்டயபடிப்பு (டிப்ளமோ) இளங்கலை பட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்வித்தகுதி பெற்றிருப்போர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ள தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் பெற வழி வகை செய்யப்படும்.
இத்திட்டத்தின் கீழ் 10 இலட்சம் முதல் ரூ 5 கோடி வரை முதலீட்டிலான தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்கு, தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை முதலீட்டு மானியமும்,, 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு ரூ.25 இலட்சம் திட்ட முதலீடு
இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்திற்கு 2021-22ம் ஆண்டுக்கு 155 நபர்களுக்கு ரூ.15.20 கோடி மானியத்துடன் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் தற்போது வரை 50 நபர்களுக்கு ரூ.15.31 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்றோர் உற்பத்தி சார்ந்த தொழில்களை ரூ.25 இலட்சம் திட்ட முதலீட்டிலும் சேவை சார்ந்த தொழில்களை ரூ.10 இலட்சம் திட்ட முதலீட்டிலும் தொடங்கலாம்.
கல்வித்தகுதி இல்லாதவர்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களை ரூ.10 இலட்சம் திட்ட முதலீட்டிலும், சேவை சார்ந்த தொழில்களை ரூ.5 இலட்சம் திட்ட முதலீட்டிலும் தொடங்கலாம்.
கிராமப்புறங்களில் தொடங்கப்படும் திட்டங்களில் பொதுப் பிரிவினருக்கு 25 சதவீதம் மானியமும் சிறப்புப்பிரிவினருக்கு 35 சதவீதம் மானியமும் வழங்கப்படும்.
தொழில் துவங்கலாம் வாழ்வில் உயரலாம்
கிராமப்புறங்களில் தொடங்கப்படும் திட்டங்களில் பொதுப் பிரிவினருக்கு 15 சதவீதம் மானியமும் சிறப்புப் பிரிவினருக்கு 25 சதவீதம் மானியமும் வழங்கப்படும்.
மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இம்மூன்று திட்டங்களில் கல்வி மற்றும் இதர தகுதிகள், தனித்திறமைகள், துவக்கவுள்ள தொழில் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுசெய்து மானியத்துடன் கூடிய கடனுதவியினைப் பெற்று தொழில் துவங்கி வாழ்வில் உயர்வடையலாம்.
யு.ஒய்.இ.ஜி.பி. மற்றும் நீட்ஸ் திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்திலும், பி.எம்.இ.ஜி.பி. திட்டத்தின் கீழ் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளவும் தேவையான ஆலோசனைக¬ ளப் பெறவும், திருப்பூர் அவினாசி ரோடு அனுப்பர்பா ளையம் புதூரில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் இயங்கி வரும் வழிகாட்டி மையத்தின் பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன் கைப்பேசிஎண் 7010521715 -ல் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் தெரிவித்தார்.
‘10 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறோம்’
நீட்ஸ் திட்டத்தின் மூலம் பயனடைந்த பரிமளம் கூறியதாவது:
எனது வயது 35. திருப்பூர் 60 அடி சாலையில் வசித்து வருகிறோம். எம்.எஸ்.சி. பட்ட படிப்பு படித்துள்ளேன். கடந்த 25 ஆண்டுகளாக ஒரு போட்டோ ஆல்பம் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன்.
முதல்வர் அறிவிப்பிற்கிணங்க படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழில் தொடங்க கடனுதவி வழங்குவது குறித்து நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.
எனது தொழிலின் மூலதனம் பற்றி திட்ட மதிப்பீடு தயாரித்து அலுவலர்களிடம் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தேன். விண்ணப்பத்தினை பரிசீலித்து 1 மாத காலத்திற்குள் மாவட்ட தொழில் மையத்தின் சார்பாக, தொழில் செய்வதற்கு ரூ.1 கோடியே 11 இலட்சம் மதிப்பில் நிதியுதவி அளித்தார்கள். அதில் மானியமாக 25 சதவீதமும் அளித்தார்கள்.
எங்களுடைய நிறுவனத்தில் வருடத்திற்கு ரூ.15 இலட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறோம். அதில் மாதத்திற்கு ரூ.3 இலட்சம் நிகர லாபம் கிடைக்கிறது. இதனால் எங்கள் கடன் தொகையை மாதந்தோறும் தவணை முறையில் திருப்பி செலுத்தி வருகிறோம்.
எங்கள் நிறுவனத்தில் 10 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறோம். ஏழை, எளிய கூலி தொழிலாளர்களை தொழிலதிபர்கள் ஆக்கி எங்கள் வாழ்வில் ஒளிஏற்றி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சி என்றென்றும் தொடர வேண்டும். நீடூழி வாழ வேண்டும். என் சார்பாகவும், எங்கள் குடும்பத்தினர் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
‘ஆண்டுக்கு ரூ.88 இலட்சம் வரை நிகர லாபம் ஈட்டுகிறேன்’
நீட்ஸ் திட்டத்தின் மூலம் பயனடைந்த சங்கரலிங்கேஸ் கூறியதாவது: எனது வயது 23. திருப்பூர் ஆண்டிபாளையத்தில் வசித்து வருகிறேன்.
பி.பி.ஏ. படித்துள்ளேன். எனது தந்தை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சிறு வயது முதல் நான் சொந்த தொழில் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் இருந்து வந்தது. கல்லூரி படிப்பு முடித்தவுடன் தொழில்செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தில் இருந்தேன்.
அப்போதுதான் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் இளம் பட்டாதாரிகளுக்கு, நீட்ஸ் திட்டத்தின் மூலம் கடனுதவி வழங்குவதை பற்றி அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். நான் தொழில் தொடங்குவதற்காக திட்ட மதிப்பீடு தயாரித்து அலுவலர்களிடம் சமர்ப்பித்தேன்.
எனது விண்ணப்பத்தினை பரிசீலித்து கனரா வங்கியின் மூலம் நிட்டிங் தொழில் செய்வதற்கு ரூ.1 கோடி மதிப்பில் எனக்கு நிதியுதவி அளித்தார்கள். அதில் மானியமாக ரூ.25 இலட்சமும் அளித்தார்கள்.
ஆரம்பத்தில் 5 பின்னாலாடை இயந்திரங்கள் மூலம் எனது தொழிலை தொடங்கினேன். தற்போது மேலும், கூடுதலாக 3 இயந்திரங்களை வாங்கி எனது தொழிலை விரிவுபடுத்தினேன்.
நாளொன்றுக்கு 300 கிலோ துணி உற்பத்தி செய்ய முடிகிறது. இதன் மூலம் 10 இளைஞர்களுக்கு நான் வேலைவாய்ப்பு அளித்துள்ளேன். இதனால் என்னால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.88 இலட்சம் வரை வருமானம் ஈட்ட முடிகிறது. சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ.1.40 இலட்சம் நிகர லாபம்கிடைக்கிறது.
என்னை போன்ற படித்த இளைஞர்களுக்கு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கடனுதவி வழங்கி ஊக்கம் அளித்து, சொந்த தொழில் புரிய உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
வெளியீடு:
செ.கு.சதீஸ்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திருப்பூர் மாவட்டம்.



