கோவையில் கல்லூரி படிப்பிற்காக வந்து, கஞ்சா விற்பனை செய்த ருவாண்டா நாட்டை சேர்ந்த வாலிபரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை சரவணம்பட்டியை அடுத்த சின்னவேடம்பட்டி பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மாணவர்களை குறிவைத்து சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தென்ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவைச் சேர்ந்த செர்பின்ஸ் (32) என்பது தெரியவந்தது.
மேலும் கோவைக்கு படிக்க வந்த செர்பின்ஸ், இங்கேயே தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், விசா காலம் முடிவடைந்து 1 ஆண்டு ஆகியும் சட்டவிரோதமாக கோவையில் தங்கி இருந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து செர்பின்ஸை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்கு வைத்திருந்த 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.



