fbpx
Homeபிற செய்திகள்“இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48” திட்டத்தில் 10 நாளில் 46 பேருக்கு ரூ. 5,45,300...

“இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48” திட்டத்தில் 10 நாளில் 46 பேருக்கு ரூ. 5,45,300 மதிப்பில் சிகிச்சை 17 மருத்துவமனைகளுக்கு அனுமதி

நாமக்கல் மாவட்டத்தில் “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ் திட்டம் தொடங்கிய டிச.18-ம் தேதி முதல் 28 வரை சாலை விபத்துகளில், பாதிக்கப்பட்ட 46 பேருக்கு ரூ.5,45,300 மதிப்பில் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காக்கப்பட்டுள்ளார்கள். இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 17 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் சிறுவயதிலேயே இருதய பாதிப்பு ஏற்பட்ட மாணவ, மாணவியர்களில் கட்டாய இருதய அறுவை சிசிக்சை தேவைப்படுபவர்களுக்காக, 2008-ம் ஆண்டில் தொடங்கி வைத்தார் இளம் சிறார் இருதய பாதுகாப்புத் திட்டம்.

பள்ளிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு இருதய கோளாறுகள் இருந்த மாணவ, மாணவியர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உயிர் காக்கப்பட்டார்கள்.

இதுபோன்ற சிகிச்சை தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் கிடைக்க ஏற்படுத்தப்பட்ட திட்டம்தான் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம் ஆகும்.

‘மக்களைத் தேடி மருத்துவம்’
அதன் தொடர்ச்சியாக, பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்திடும் வகையில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தினார்.

இத்திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 1,18,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் பெற்று வருகின்றனர்.
எதிர்பாராத வகையில் சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்பட்ட நபர்களின் இன்னுயிரை பாதுகாத்திடும் விதமாக, “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” திட்டத்தை முதல்வர் 18.12.2021 அன்று துவக்கி வைத்துள்ளார்.

இளைஞர்கள் அதிகம் பலி
இத்திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, சாலை விபத்துகளைப் பொறுத்தவரையில் நமது நாட்டில் அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து இருந்து வருகிறது.

சாலை விபத்துகளால் ஏற்படக்கூடிய ஒவ்வொரு உயிர் இறப்பிலும், அந்த நபர் மட்டுமின்றி அந்தக் குடும்பத்தின் எதிர்காலமே ஒடுங்கி விடுகிறது. சாலை விபத்துகளில் இறப்பவர்கள் பெரும்பாலும் இளம் வயதினர் ஆவார்கள். சாலை விபத்துகள் விலைமதிக்க முடியாத இளைஞர்களின் எதிர்காலத்தை சேர்த்தே எடுத்துச் சென்று விடுகிறது.

சாலை விபத்துகளைக் குறைத்தும், சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுத்தும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது.

உயிரிழப்பை குறைக்க
ஒவ்வொரு தனிமனிதரின் உயிர், அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்த அரசுக்கும் நாட்டுக்கும் மிகமிக முக்கியம் என்பதை உணர்ந்தாக வேண்டும்.

இந்த வகையில் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கத்தோடும், விபத்து காரணமாக எந்த உயிரும் பறிபோகக் கூடாது என்பதற்காகவும் தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்டுள்ள திட்டம்தான் ‘இன்னுயிர் காப்போம்’ என்கிற திட்டம்.

‘கோல்டன் ஹவர்ஸ்’
விபத்தில் உயிர் போவதற்கு முக்கியமாக காரணம் நேரமும் காலமும்தான். விபத்து நடந்ததும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்து விட்டால் நிச்சயமாக அந்த உயிரைக் காப்பாற்றிட முடியும். காலதாமதம் ஆகும்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை மருத்துவர்கள் ‘கோல்டன் ஹவர்ஸ்’ என்று சொல்வார்கள்.

விலைமதிக்க முடியாத அந்தத் தருணத்தில் துரிதமான செயல்பாடுகள் தான் மனித உயிர்களைக் காப்பாற் றுகிறது. அப்படிச் சேர்க்கப்படும் இடம், அரசு மருத்துவமனையா, தனியார் மருத்துவமனையா என்ற பாகுபாடு இல்லாமல் இருந்திட வேண்டும்.

அதனால்தான் இந்தத் திட்டத்தின்கீழ், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில், முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை, தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்.

48 மணி நேரத்திற்குள் உரிய சிகிச்சை அளித்து உடனடியாக கவனித்துவிட்டால், பெரும்பாலும் உயிர்கள் காக்கப்படும். அதன்பிறகு முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறலாம்.

சாலை விபத்துகளால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அறுவை சிகிச்சைகளும், தீவிர சிகிச்சைகளும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இத்திட்டத்திற்கென அங்கீகரிக்கப் பட்ட 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வேறுபாடு இல்லாமல்
இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வேறு நாட்டவர் என்ற வேறுபாடின்றி, தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைந்தோர் அனைவருக்கும் முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் (81 சிகிச்சைகள் தொகுப்பு) சிகிச்சை அளிக்கப்படும்.

48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிலையற்றவராக இருந்தால் அல்லது மேலும் தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால் ‘முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்’ கீழ் அல்லது தகுந்த வழிகாட்டுதல்களின்படி தொடர் சிகிச்சைகள் நிச்சயமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

எங்கெங்கு அனுமதி
நாமக்கல் மாவட்டத்தில், “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” திட்டத்தின் கீழ், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரவிந்த் மருத்துவமனை, நாமக்கல் சிஎம் மருத்துவமனை, நாமக்கல் மகாராஜா சிறப்பு மருத்துவமனை, நாமக்கல் மாணிக்கம் மருத்துவமனை, நாமக்கல் மாருதி மருத்துவமனை, நாமக்கல் ஸ்ரீ அக்ஷயா மருத்துவமனை, நாமக்கல் தங்கம் மருத்துவமனை, நாமக்கல் வேலவன் மருத்துவமனை, ராசிபுரம் அரசு மருத்துவமனை, ராசிபுரம் சுகம் மருத்துவமனை, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை, திருச்செங்கோடு விவேகானந்தா மெடிக்கல் கேர் மருத்துவமனை, பரமத்திவேலூர் அரசு மருத்துவமனை, குமாரபாளையம் அரசு மருத்துவமனை, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனை, கொல்லிமலை அரசு மருத்துவமனை ஆகிய 17 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ், திட்டம் தொடங்கிய 18.12.2021 முதல் இன்று 28.12.2021 வரை சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்ட 46 நபர்களுக்கு ரூ.5,45,300 மதிப்பில் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காக்கப்பட்டுள்ளார்கள்.
ப்ரீ சிகிச்சையால் பயம் நீங்கியது

நாமக்கல் – திருச்சி சாலையில் பாரதிபுரம் பஸ் நிறுத்த பகுதியில், இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, கார் மோதி விபத்துக்குள்ளான காளிமுத்து என்பவர் உறவினர்களால் 108 அவசர சிகிச்சை ஊர்தியில் கொண்டு வரப்பட்டு, நாமக்கல் நகரில் ‘இன்னுயிர் காப்போம்’ திட்ட தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு தலைக்காயம், முதுகுப்பகுதி, வலது கால் பாதம் மற்றும் தாடையில் ஏற்பட்ட காயங்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காக்கப்பட்டுள்ளது.

பாதிப்புகள் குறித்து அறிந்து கொள்ள முதுகு தண்டுவடம், வயிறு, இடுப்பு பகுதிகளில் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மார்பு பகுதியில் எக்ஸ்-ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காளிமுத்துவுடன் இருந்த அவரது மகள் தாமரை தெரிவித்ததாவது:
எனது அப்பா, அக்காவின் வீட்டிற்கு செல்லும் போது ஓம்னி கார் மோதி கீழே விழுந்து மயக்கமடைந்துவிட்டார். அருகில் இருந்தவர்கள் மற்றும் எனது உறவினர்கள் 108- ல் கொண்டு வந்து இந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

இங்கு சிகிச்சை அளித்து, இப்போ எங்க அப்பா நல்லாயிருக்காங்க. செலவு எவ்வளவு வருமோ, காசுக்கு என்ன பண்ணறதுன்னு பயந்துகிட்டு இருந்தோம். ஃப்ரி சிகிக்சைன்னு சொன்னாங்க.

விபத்துல பாதிச்சவங்களுக்கு ஃப்ரியா சிகிச்சை வழங்க உத்தரவிட்ட ஸ்டாலின் ஐயாவுக்கு ரொம்ப நன்றி என்றார். பேத்தி பிறந்ததை பார்க்க இரு சக்கர வாகனத்தில் வந்தபோது, கார் மோதியதில் விபத்திற்குள்ளான சுப்பம்மாள், 108 அவசர சிகிச்சை ஊர்த்தியில் கொண்டு வரப்பட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவருக்கு தலையில் காயம், நெஞ்சு வலி, வயிறு வலி இருந்ததால் தலை, நெஞ்சு, வயிற்று பகுதிகளில் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காக்கப்பட்டுள்ளார்.

காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது மகள் தெரிவிக்கையில், எனது ஊர் புதுக்கோட்டை. பேரு மகேஸ்வரி. எங்க பொண்ணுக்கு குழந்தை பிறந்ததை எங்கம்மா பார்க்க வந்தாங்க.

மேய்க்கல்நாயக்கன்பட்டி செக்போஸ்ட் பக்கத்துல கார்காரங்க இடிச்சுட்டு போயிட்டாங்க. எங்க அம்மா அடிபட்டு ரோட்டுல கிடந்தாங்க. 108 ஆம்புலன்ஸ்-ல கூட்டிட்டு வந்து ஆஸ்பிட்டல்ல வச்சிருக்காங்க. இப்ப எங்கம்மா உயிர காப்பாத்திட்டாங்க என்றார்.

கட்டணமே இல்லாமல் 48 மணி நேர சிகிச்சை
நாமக்கல் – மோகனூர் சாலையில் லிட்டில் ஏஞ்சல் பள்ளி அருகில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான முத்தம்மாள் அவசர சிகிச்சை ஊர்தியில் கொண்டு வரப்பட்டு, நாமக்கல் நகரில் ‘இன்னுயிர் காப்போம்’ திட்ட தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவருக்கு தலைக்காயம், இடது முழங்கை முறிவு, இடது மூட்டு முறிவு, மார்பகத்தில் காயம் ஆகியவற்றிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காக்கப்பட்டுள்ளார். தலை மற்றும் மூட்டு பகுதிகளில் சிடி ஸ்கேன் பரிசோதனையும், மார்பகம் மற்றும் முழங்கை பகுதிகளில் எக்ஸ்ரே பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.

முத்தம்மாள் உடன் இருந்த அவரது பேத்தி தீபனா தெரிவித்ததாவது: நான் வேளாண்மை கல்லூரியில் படித்து வருகிறேன். எனது பாட்டி முத்தம்மாள் அணியாபுரம் – மோகனூர் ரோட்டில் போகும்போது ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு.

எதிரில் வந்த ஒரு பெண் டூவீலரில் ஹிட் பண்ணிட்டாங்க. நாங்க நாமக்கல் சிஎம் ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம். நர்ஸ், டாக்டர் எல்லாம் அக்கறையோடு பார்த்துக்கிட்டாங்க. அப்போ டாக்டர் கட்டணமின்றி 48 மணி நேரம் சிகிச்சை வழங்கப்படுவது சொன்னாங்க.

48 மணி நேரத்திற்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாதுன்னு சொன்னாங்க. இப்போ எங்க பாட்டி நல்லாயிருக்காங்க. சாலை விபத்துல பாதிக்கப்பட்ட காசு இல்லாதவங்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக உள்ளது.

விபத்துல பாதிக்கப்பட்டவங்களுக்கு கோல்டன் பீரியர்ட்ல உடனடி சிகிச்சை வழங்க வேண்டியபோது, பணமில்லாமல் சிகிச்சை அளிப்பது ரொம்பவும் உதவிகரமானது. இத்திட்டத்தை கொண்டு வந்த முதலமைச்சர் ஸ்டாலின் ஐயாவிற்கு நன்றி என்றார்.

தொகுப்பு:
சி.சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
ஆர்.சரண், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்,
நாமக்கல் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img