நாட்டில் மற்ற மாநில தேர்தல்களை காட்டிலும், இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு நடைபெறும் தேர்தல் மட்டும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சுமார் 24 கோடி பேர் மக்கட்தொகை கொண்ட இம்மாநிலத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 80. சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 403. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தை காட்டிலும் அதிக மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்டிருப்பதால் உத்தரப்பிரதேசம் அரசியல் ரீதியாக வலிமையான மாநிலமாக திகழ்கிறது.
ஜவகர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, சரண் சிங், ராஜிவ் காந்தி, சந்திரசேகர், விபி சிங் என 7 பிரதமர்களை இந்தியாவுக்கு உத்தரப்பிரதேசம் தந்துள்ளது. வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடியையும் சேர்த்துக் கொண்டால் இந்த எண்ணிக்கை 9- ஆக உயரும்.
உத்தரப்பிரதேசத்தில் அதிக இடங்களை வெல்லும் கட்சியே பெரும்பாலும் மத்தியில் ஆட்சியமைக்கும் நிலை உள்ளதால் அம்மாநிலத்திற்கு அரசியல் கட்சிகள் அதிக முக்கியத்துவம் தருவது இயல்பான ஒன்றாக உள்ளது.
இதன் காரணமாகவே மக்களவைத் தேர்தலுக்கு அடுத்தபடியாக நாடெங்கும் அதிகம் கவனிக்கப்படும் தேர்தலாகவும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், தற்போதைய உத்தரப்பிரதேச தேர்தல் 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையலாம் என்பதால் இத்தேர்தல் குறித்த பெரும் எதிர்பார்ப்பு நாடெங்கும் எழுந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில், இன்று முதல்கட்டமாக 58 தொகுதிகளுக்கான தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடித்து விட்டால் கிட்டத்தட்ட மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து விடலாம் என்ற எழுதப்படாத விதி இருப்பதால், உத்தரபிரதேசத்தில் ஆட்சியை பிடிப்பதில், பாஜக, சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!



