fbpx
Homeபிற செய்திகள்அரியலூர் மாவட்டத்தில் 770 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 9,243 பேருக்கு ரூ.41.01 கோடி...

அரியலூர் மாவட்டத்தில் 770 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 9,243 பேருக்கு ரூ.41.01 கோடி கடன் உதவி

அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 770 மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 9,243 உறுப்பினர்களுக்கு ரூ.41.01 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழக அரசு 1989-ம் ஆண்டு, தருமபுரி மாவட்டத்தில், மகளிரின் முன்னேற்றத்திற்காக, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தொலைநோக்கு பார்வையில் துவங்கப்பட்ட சுய உதவிக்குழுக்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க, வங்கி கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக்குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.

நலிவுற்றோரை ஒருங்கிணைத்து சிறப்பு குழுக்களும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களைக் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், முதல்வர் மு.க. ஸ்டாலின், 14.12.2021 அன்று 1,730 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.105 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்கினார்.

அப்போது, சுய உதவிக்குழுக்களின் முன்னேற்றம் குறித்தும், சுய உதவிக்குழு இயக்கத்தில் இணைந்து அவர்கள் ஆற்றி வரும் பணிகள் குறித்தும் பொருளாதார மேம்பாடு அடைவதற்கு தேவையான உதவிகள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் 5 மாவட்டங்களைச் சேர்ந்த சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

ரூ.2485 கோடி கடனுதவி
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 52,574 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 6,83,462 பயனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 2485.96 கோடி ரூபாய் வங்கிக் கடன் மற்றும் 30 இ-சேவை மையங்கள் துவங்குவதற்காக, 30 பயனாளிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம், சுயதொழில் தொடங்க தொழில் கடனாக நகர்ப்புறத்தைச் சேர்ந்த 931 குழுக்களுக்கு ரூ.26.60 கோடி, 1,381 தனி நபர்களுக்கு ரூ.16.09 கோடி, 4,702 நகர்ப்புற சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 57,451 பயனாளிகளுக்கு தொழில் தொடங்கிட வங்கிக் கடனாக ரூ.219.37 கோடி வழங்கப்பட்டது.

ஊரக புத்தாக்கத் திட்டத்தின்கீழ், ஊரக பகுதிகளில் பாரம்பரிய மற்றும் அதிக வருமானம் தரும் தொழில்களில் திறன்/ அனுபவம் வாய்ந்த நபர்களைக் கொண்டு இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பினை பெற்றுத்தர முதல் கட்டமாக 69 சமுதாய திறன் பள்ளிகள் தொடங்க, ரூ.66 இலட்சம் மற்றும் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பில் உள்ள திறன் இடைவெளிகளை கண்டறிந்து தேவையான தொழில்நுட்ப பயிற்சிகளும், உற்பத்தி செலவினை குறைத்து, வருமானத்தை பெருக்கிடும் பயிற்சிகள் வழங்க 37 சமுதாய பண்ணை பள்ளிகள் துவங்க ரூ.26 இலட்சம், உற்பத்தியாளர் குழுக்களுக்கான துவக்க நிதியாக 90 குழுக்களுக்கு ரூ.68 இலட்சம் மற்றும் தொழில் குழுக்களுக்கான துவக்க நிதியாக 30 குழுக்களுக்கு ரூ.23 இலட்சமும் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்றைய தினம் 58,463 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 7,56,142 உறுப்பினர்களுக்கு ரூ.2749.85 கோடி மதிப்பிலான கடனுதவிகள்/ நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 770 மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 9,243 உறுப்பினர்களுக்கு ரூ.41.01 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங் கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

கிடைத்தது நிதி ரூ.97 லட்சம்
துவங்கினோம் சுய தொழில்
இத்திட்டம் மூலம் பயன்பெற்ற தத்தனூர் ஊராட்சியைச் சேர்ந்த குழு கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூறியதாவது:

பெண்கள் அனைவரும் சுயசார்புடன் வாழும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலமாக கடனுதவிகளை வழங்கியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இத்திட்டத்தின் மூலமாக தத்தனூர் ஊராட்சியைச் சேர்ந்த குழு கூட்டமைப்பில் உள்ள 49 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.97 இலட்சம் சுழல்நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொகையைக் கொண்டு குழு கூட்டமைப்பில் உள்ள அனைத்து உறுப்பினர்களும், அவர்களுக்கு தெரிந்த தொழில் தொடங்குவதற்காக கறவை மாடு, ஆடு வளர்ப்பு, தையல் தொழில், சிறு விவசாயம், காய்கறி விற்பனை, சிறிய அளவிலான மளிகைக் கடை விற்பனை போன்ற தொழில்கள் மூலமாக எங்களது குடும்ப வருமானத்தை ஈடு செய்வதுடன், எங்களது தொழில்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில், அதற்கான முதலீடுகளை ஈர்த்து, எங்கள் தொழில்களை மேம்படுத்தி வருகிறோம்.

இதன் மூலம் எங்களது ஊரில் பெண்கள் அனைத்து வகையிலும் முன்னேறி சொந்த காலில் நிற்க வழிவகை செய்தமைக்கும், கடந்த ஆண்டுகளில் கூட்டுறவுச் சங்கங்களில் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்தமைக்கும் முதல்வருக்கு எங்களது குழு கூட்டமைப்பின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

இத்திட்டம் மூலம் பயன்பெற்ற காடுவெட்டாங்குறிச்சி ஊராட்சியைச் சேர்ந்த குழு கூட்டமைப்பு உறுப்பினர் ஜெயலட்சுமி என்பவர் கூறியதாவது:
பெண்கள் நலனில் அதிக அக்கறை கொண்டு, அவர்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், நகர அரசுப் பேருந்துகளில் மகளிர் அனைவரும் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையில், இலவச பேருந்து பயண சேவைத்திட்டத்திற்கு முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.

கிராமப்புறங்களில் ஏழை, எளிய குடும்பங்களை முன்னேற்றும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெண்கள் அனைவரும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கி முதல்வர் துவக்கி வைத்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சுழல்நிதி மூலமாக, எங்களது கிராமத்தில் உள்ள குழு கூட்டமைப்புகளைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் கறவை பசு வளர்த்தல், தையல் தொழில், கலைப்பொருட்கள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில் தொடங்க வங்கிகள் மூலமாக கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

எனக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடனுதவி மூலமாக, கறவை பசு வாங்கி பால் உற்பத்தி தொழில் செய்ய உள்ளேன்.

என்னைப்போன்ற ஏழை, எளிய பெண்களும் சுயமாக தொழில் தொடங்கி, தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும், பெருமை சேர்க்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கியும், கடந்த ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்களில் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்த முதல்வருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தொகுப்பு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
அரியலூர்.

படிக்க வேண்டும்

spot_img