fbpx
Homeபிற செய்திகள்நிவாரணம் வழங்க நேரில் செல்லாத விஜய் - சரியா?

நிவாரணம் வழங்க நேரில் செல்லாத விஜய் – சரியா?

பொதுவாக புயல், வெள்ளம் போன்ற பேரிடர் பாதிப்புகளில் மக்களை நேரில் தலைவர்கள் சந்தித்து நிவாரணம் வழங்குவதே வழக்கம். அரசியல்வாதிகள், ஏன் முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட நேரடியாக சென்று மக்களிடம் விசாரித்து நிவாரணங்களை வழங்கினர்.

சினிமாவில் இருந்து பிரபலமாக இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்கள் எம்ஜிஆர், விஜயகாந்த் கூட புயல், வெள்ளம் சமயங்களில் நேரடியாக மக்களிடம் வந்து நிவாரணம் வழங்கி உள்ளனர். ஆனால் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் மக்களை நேரில் சென்று சந்திக்கவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பஸ் அனுப்பி அவர்களை நேரில் வரவழைத்து நிவாரணம் வழங்கி உள்ளார்.

விஜயின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. விஜய் செய்த விஷயங்கள் இணையத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
கூட்டம் அதிகமாக இருக்கும்... நான் வந்தால் கூட்டம் இன்னும் கூடும். அதனால் நான் வரவில்லை என்று விஜய் கூறியுள்ளார்.

எம்ஜிஆருக்கு வராத கூட்டமா? உரிய பாதுகாப்புடன் சென்றிருக்க வேண்டும். விஜய் கூறும் காரணம் ஏற்கத்தக்கதல்ல. விஜய் நேரில் சென்று சந்தித்து இருக்க வேண்டும். சந்திக்கவில்லை என்றால். புயல் நிவாரணங்களை தொண்டர்கள் மூலம் வழங்கி இருக்க வேண்டும்.

அதுவும் இல்லையென்றால் இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு புயல் பிரச்சனைகள் முடிந்தபின் பாதிக்கப்பட்டவர்களின் ஊரிலேயே மேடை போட்டு நிவாரணம் வழங்கி இருக்கலாம். ஆனால் இதை எல்லாம் செய்யாமல் பாதிக்கப்பட்டவர்களை இந்த மோசமான தருணத்தில் பேருந்தில் வரவழைத்து வந்துள்ளனர்.

இது எல்லாம் விமர்சனங்களாக விஜய்க்கு எதிராக சென்றுள்ளது. அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க போகிறோம். மெஜாரிட்டி இடங்களில் வென்று ஆட்சியை பிடிப்போம், எங்கள் கூட்டணிக்கு வரலாம் என்று கூறிய விஜய் இதுவரை களத்திற்கு செல்லவே இல்லை. இது போன்ற நேரங்களில்தான் கட்சி தொடங்கி ஒருவர் களத்திற்கு சென்று மக்களுடன் நிற்க வேண்டும்.

திமுக, அதிமுக போன்ற கட்சிகள் வளர காரணம் மக்களுடன் நின்றதே. ஆனால் விஜய் அப்படி ஒரு வாய்ப்பை தவற விட்டுவிட்டார். இந்த ஒரு விஷயம் என்று இல்லாமல் விஜய் அரசியலில் வரிசையாக தவறுகள் செய்வதை தவிர்த்தே ஆக வேண்டும்.
இல்லையெனில் தேர்தல் சமயத்தில்கூட அவரை மக்கள் கண்டுகொள்ளாமல் கடந்து போய் விடுவார்கள்.

விஜய்க்கு சரியான ஆலோசனை சொல்வதற்கு மூத்த தலைவர்கள் அவசியம் என்பதைத் தான் இந்த செயல் சுட்டிக்காட்டுகிறது என்பதை விஜய் புரிந்து கொண்டு அதற்கேற்ப அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்த பழக வேண்டும் & அது தான் வெற்றிக்கு வழிகோலும் என்பதில் சந்தேகமில்லை!

படிக்க வேண்டும்

spot_img