fbpx
Homeபிற செய்திகள்2 மாத கன்றுக்குட்டிக்கு அறுவை சிகிச்சை: வேலூர் கால்நடை மருத்துவர்கள் சாதனை

2 மாத கன்றுக்குட்டிக்கு அறுவை சிகிச்சை: வேலூர் கால்நடை மருத்துவர்கள் சாதனை

வேலூர் மாவட்டம் அரசு கால்நடை பெரு மருத்துவமனையில் இரண்டு மாத கன்று குட்டிக்கு அரிய வகை அறுவை சிகிச்சை செய்து, வேலூர் கால்நடை மருத்துவர்கள் சாதனை புரிந்தனர்.

வேலூர் மாவட்டம் செம்பேடு கிராமம் பெருமாள் என்பவருடைய இரண்டு மாத கன்று குட்டி பிறவி குறைபாடு காரணமாக தொப்புள் கொடி பகுதியில் ஒரு பெரிய கட்டியுடன் பிறந்ததிலிருந்தே சாணம் ஆசன வாய் வழியாக வெளிவராமல் தொப்புள்கொடி வழியாக வெளியேறி சரியாக உணவு உண்ண முடியாமல் அவதிப்பட்டு வந்தது.

அதனை பரிசோதித்துப் பார்த்த கால்நடை மருத்துவர் ரவிசங்கர் வயிற்றுப் பகுதியை திறந்து பார்த்தால் தான் என்ன பிரச்சனை என்று அறிய முடியும் என்றார்.
வேலூர் அரசு கால்நடை பெரு மருத்துவமனையில் மரு. ரவிசங்கர், மரு. சுப்பிரமணியன் ஆகியோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

அறுவை சிகிச்சை

இரண்டு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு குடல் பகுதி சீராக இல்லை என்பதும் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையாமல் இருப்பதும் தெரிய வந்தது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் இரண்டு குடல் பகுதியையும் ஒன்றாக இணைத்தனர்.

வெளியில் இருந்த சுமார் ஒரு கிலோ எடையுள்ள கட்டியும் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு கன்று குட்டி நல்ல நிலையிலும், ஆசனவாய் வழியாக சாணத்தை வெளியேற்றியது.

இந்த அரிய வகை பிறவி குறைபாடு நோயினை கண்டறிந்து அறுவை சிகிச்சையில் கன்று குட்டிக்கு மறுவாழ்வு அளிக்கப்பட் டது. ஏழை விவசாயியின் முகத்தில் புன்னகை தென்பட்டது.

வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டது. கால்நடை மருத்துவத்துறையில் பல சாதனைகளை புரிந்து வரும் வேலூர் அரசு கால்நடை பெரு மருத்துவமனையின் மற்றொருபெரும் சாதனையாக இது கருதப்படுகிறது.

கன்று குட்டியின் உரிமையாளர் பெருமாள் வேலூர் அரசு கால்நடை பெரு மருத்துவமனைக்கும், மருத்துவர்களுக்கும் மற்றும் முதல்வருக்கும் நன்றிகளை தெரிவித்தார். அவர் கூறியதாவது.

என்னுடைய தொழில் விவசாயம் மற்றும் கால்நடைகளை வளர்ப்பதும் ஆகும். நான் வளர்த்த பசு, கன்று ஈன்றது. அந்த கன்று குட்டி தொப்புள் கொடி பகுதியில் பெரிய கட்டியுடன் பிறந்ததிலிருந்தே ஆசன வாய் வழியாக சாணம் வெளிவராமல் தொப்புள்கொடி வழியாக வெளியேறி சரியாக உணவு உண்ண முடியாமல் அவதிப்பட்டு வந்தது.

இதனை சரிசெய்வதற்காக, அருகாமையில் இருக்கும் தனியார் கால்நடை மருத்துவரை அணுகி இரண்டு மாதமாக சிகிச்சை மேற்கொண்டு வந்தேன். இருப்பினும் குறைபாடு சரிசெய்ய முடியாமல் தொடர்ந்து வந்தது. இதற்கு மருத்துவ செலவினமே எனக்கு ரூ.பத்தாயிரம் ஆகி விட்டது.

அதற்கு பின்னரே அரசு பெரு மருத்துவமனைக்கு சென்ற போது, ஒரே நாளிலியே கால்நடை மருத்துவர்கள் வயிற்றின் கீழ் பகுதியில் இருந்த கட்டியினை அகற்றி கன்று குட்டியின் சிறுகுடல், பெருங்குடல் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் இரண்டு குடல் பகுதியும் இணைத்தனர். இணைத்தபின் மூன்று வாரத்திற்கு பிறகும் கன்று குட்டி நன்றாக உள்ளது.

சாணம் ஆசனவாயின் வழியாக தான் வெளிவருகிறது. கன்று குட்டி சரியான முறையில் உணவு உட்கொண்டு வருகிறது. கன்று குட்டி நலமாக உள்ளது.

இந்த பேருதவியினை செய்து கொடுத்த அரசு பெரு மருத்துவர்களுக்கும், பெரு மருத்துவமனை வேலூர் மாவட்டத்தில் கிடைக்கப் பெற்றதற்கும், சிறப்பான மருத்துவர்களை கால்நடை மருத்துவத்துறையில் அமர்த்தி விவசாயிகளுக்கு பெரும் உதவிகளை செய்து தந்த முதல்வருக்கு கோடான கோடி நன்றி என்றார்.

தொகுப்பு:
அ.சுகுமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
மு.பரத்குமார்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி).
வேலூர்.

படிக்க வேண்டும்

spot_img