பொங்கல் பண்டிகையையொட்டி பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா இன்று துவங்கியது. 8 நாடுகளில் இருந்து 10 பிரமாண்ட வெப்ப பலூன்கள் இன்று பறக்க விடப்பட்டன.
சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா
பொள்ளாச்சியில் பொங்கல் பண்டிகை ஒட்டி சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா இன்று துவங்கியது.தமிழ்நாடு சுற்றுலா துறை தனியாருடன் இணைந்து இந்த பலூன் திருவிழாவை முதல்முறையாக நடத்துகின்றது.
இன்று துவங்கி வரும் 15ம் தேதி வரை இந்த பலூன் திருவிழா நடைபெறுகின்றது. இந்த பலூன் திருவிழாவில் நெதர்லாந்து, அமெரிக்கா, பிரேசில், கனடா உட்பட 8 நாடுகளில் இருந்து பத்து வெப்ப பலூன்கள் பறக்க விடப்படுகிறது.
60 அடி முதல் 100 அடி உயரம் கொண்ட இந்த பலூன்கள் இந்த திருவிழாவில் பறக்கவிடப்பட்டன. பலூன்களுக்கு வெப்பகாற்று அடிக்கப்பட்டு மிக்கி மவுஸ், டைனோசர் உட்பட பல்வேறு வடிவங்களிலும் பலூன்கள் பறக்க விடப்பட்டது.
இதில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பிலும் ஒரு பலூன் பறக்க விடப்பட்டது. இந்த திருவிழாவில் கலந்துகொண்டு பலூனின் பறக்க தமிழக மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
இன்று அதிகாலையில் பலூன் திருவிழா தொடங்கியதை அடுத்து வானில் வட்டமிட்டு சென்ற ராட்சச பலூன்களை கண்டு பொள்ளாச்சி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.