fbpx
Homeபிற செய்திகள்கோவையில் 'யுனைடெட் எகனாமிக் சம்மிட்’ நிகழ்ச்சி: உகாண்டாவில் முதலீடு செய்ய இந்திய தொழில் முனைவோருக்கு அழைப்பு

கோவையில் ‘யுனைடெட் எகனாமிக் சம்மிட்’ நிகழ்ச்சி: உகாண்டாவில் முதலீடு செய்ய இந்திய தொழில் முனைவோருக்கு அழைப்பு

இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பு, யுனைடெட் டிப்ளமேட்டிக் கவுன்சிலுடன் இணைந்து கோவையில் நடைபெற்ற “யுனைடெட் எகனாமிக் சம்மிட் 2026” நிகழ்ச்சியில், உகாண்டா மற்றும் ஓமனில் உள்ள முதலீட்டு வாய்ப் புகள் மற்றும் வர்த்தக சாத்தியக்கூறுகள் குறித்து விளக்கமளித்தது.இந்நிகழ்ச்சியில் இந்தி யாவிற்கான உகாண்டா நாட்டின் தூதர் ஜாய்ஸ் ககுராமத்ரி கிகாபுண்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். யுனைடெட் டிப்ள மேட்டிக் கவுன்சில் மற்றும் இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பு அமைப்பின் தலைவர் ஆசிஃப் இக்பால் தலைமை வகித்தார்.


நிகழ்ச்சியில் பேசிய தூதர் ஜாய்ஸ் ககுராமத்ரி கிகாபுண்டா, தற்போது உகாண்டாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 61 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளதாகவும், 2040-ஆம் ஆண்டுக்குள் அதை 500 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் இலக்குடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இதில் எண்ணெய் வளமேம்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.“ஆப்பிரிக்காவின் முத்து” (Pearl of Africa) என்று அழைக்கப்படும் உகாண்டா, விரைவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக உருவெடுக்கவுள்ளதாகவும், விவசாயத் துறையில் முதலீடுகளை அதிகரிக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எளிதில் நிலம் ஒதுக்கப்படும் என்றும், வேளாண்மை முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரிவிலக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.


மேலும், கரையக்கூடிய காபி (Soluble Coffee) பதப்படுத்தும் தொழிற்சாலை, பருத்தி பதப்படுத்துதல், கண்ணாடி உற்பத்தி, கோகோ பதப்படுத்துதல், பருத்தி நூல் உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய ஏற்ற திட்டங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உகாண்டா ஆப்பிரிக்காவின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், இந்தியாவில் இருந்து வெறும் 6 மணி நேரப்பயணத்தில் சென்றடைய முடியும் என்றும், அங்கிருந்து தயாரிப்பு பொருட்கள் மற்றும் வேளாண் பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மிகவும் எளிது என்றும் அவர் குறிப்பிட்டார்.


மேலும், உகாண்டாவில் கிடைக்கும் மூலப்பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரி விலக்கு வழங்கப்படும் என்றும், முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தை முழுமையாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பும் வசதியும் உகாண்டாவில் இருப்பதாக ஜாய்ஸ் ககுராமத்ரி தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் போது, இந்தியா – ஜிசிசி வர்த்தக கவுன்சிலின் ஓமனுக்கான வர்த்தக ஆணையராக டாக்டர் ரெஞ்சித் சி.ஏ. நியமிக்கப்பட்டார். இவர், 2026 செப்டம்பரில் ஓமன் மற்றும் உகாண்டாவிற்கு மேற்கொள்ள உள்ள இந்திய வர்த்தக பிரதிநிதிகள் குழுவின் பயணத்தை ஒருங்கிணைத்து வழிநடத்த உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img