யூனியன் பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டலம் சார்பில் சோமனூரில் குறுசிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் விழா நேற்று (மார்ச் 4) நடைபெற்றது. இதில் ஏராளமான தொழில் முனைவோர் பங்கேற்றனர்.
கடந்த 1919 ஆம் ஆண்டு துவங்கி சிறப்பாக செயல்பட்டு வரும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா, தனிநபர் கடன், வீட்டுக் கடன், தொழில் கடன் என பல்வேறு புதிய திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டலம் சார்பாக தொழில் நகர மான கோவை மாவட்டத்தில் குறுசிறு மற்றும் நடுத்தர தொழில்
நிறுவனங்களுக்கான கடன் வழங்கும் விழா சோமனூரில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதற்கான துவக்க விழாவில், வங்கியின் கோவை மண்டல தலைவர் எஸ்.எஸ்.லாவண்யா, முதன்மை பொது மேலாளர் அருண்குமார், கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்ய மனோகரன், கொடிசியா தலைவர் கார்த்திகேயன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சண்முக சிவா, வங்கியின் துணை மண்டல தலைவர்கள் மகாதேவ் நாகப்பா மொஹிர், முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர் எஸ்.எஸ்.லாவண்யா பேசுகையில், தாம் சோமனூர் கிளையில் சில மாதங்கள் மேலாளராக பணி யாற்றிய போது நடந்த நிகழ்வை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
ஏராளமான விசைத்தறி கூடங்களுடன் தூங்கா நகரம் என்ற பெயர் கொண்ட சோமனூர் மக்கள் கடன் வாங்கிய பிறகு அவற்றை திரும்ப செலுத்துவதில் மிக பொறுப்புடன் நடந்து கொண்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
விழாவில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா கடன் வழங்கும் திட் டங்களான யூனியன் எம்எஸ்எம்இ, பிரதமர் கடன் உதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் தரப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் புதிய தொழில்முனைவோர், தொழில் அதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு கடனுக்கான முன்அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டன.



