ஆளுநர், ஒன்றிய அரசிற்கும், மாநில அரசிற்கும் பாலமாக இருந்து மாநிலத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் ஒன்றிய அரசிடமிருந்து பெற்று தர வேண்டும். இது அவரது கடமை- அது தான் அவரது முக்கிய வேலை.
ஆனால் ஆர்.என்.ரவி என்றைக்கு தமிழ்நாட்டிற்கு ஆளுநராக வந்தாரோ, அன்றில் இருந்து தமிழ்நாடு அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய நல்லத் திட்டங்களை செய்யவிடாமல் முட்டுக்கட்டை போட்டு தடுத்து வருகிறார் என்பது பெரும் குற்றச்சாட்டாக உருவெடுத்துள்ளது.
தங்கத்தின் விலையாவது ஏறிக்கொண்டே இருக்கும், திடீரென கொஞ்சம் இறங்கும். ஆளுநர் மாளிகையில் நிலுவையில் இருக்கும் தமிழ்நாடு அரசின் கோப்புகள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறதே தவிர குறைவதற்கு வாய்ப்பே இல்லை.
தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான ஆளுமை நிறைந்த தலைவர்களுள் ஒருவரான தோழர் என்.சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் தர அனுமதி கோரிய கோப்பைக்கூட ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டிருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. அதிர்ச்சியைத் தந்துள்ளது.
தோழர் சங்கரய்யா யார்? தனது இளம் வயதிலேயே தனது படிப்பை பாதியில் துறந்து சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர், இதற்காக சுமார் 8 ஆண்டுகள் தனது வாழ்வை சிறையில் கழித்தார்.
ஏழை, எளிய மக்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த இவரது ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக கௌரவ முனைவர் பட்டம் வழங்க கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த சூழலில் தோழர் சங்கரய்யாவுக்கு நவம்பர் 2 ம் தேதி நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கௌரவ முனைவர் பட்டம் வழங்க அனுமதி கோரும் கோப்பு பல்கலைக்கழகத்தால் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சமர்ப்பிக்கப்பட்ட போது, அவர் அதில் கையொப்பமிட மறுத்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சரின் செய்திக் குறிப்பும் அதனை உறுதி செய்துள்ளது.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் தமிழக அரசு வழங்கிய ‘தகைசால் தமிழர்’ விருதினை ஏற்றுக் கொண்ட தோழர் சங்கரய்யா, அரசு அளித்த விருது தொகையான ரூபாய் 10 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்.
எனவே, அத்தகைய சிறப்பு வாய்ந்த தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதால் அந்த பட்டத்திற்கும், வழங்குகிற பல்கலைக்கழகத்திற்கும் தான் பெருமை கூடும் என்பது வெளிப்படை.
100 வயதைக் கடந்த தோழர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இதனை முன்னெடுத்ததால் தான் அதற்கு ஆளுநர் அனுமதி தரவில்லையோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், தோழர் என்.சங்கரய்யாவின் மகத்தான தியாக வாழ்வை அங்கீகரிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
தோழர் சங்கரய்யா, கௌரவ டாக்டர் பட்டம் பெறத் தகுதியானவர் அல்ல என்று தானே கோப்பில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி மறுக்கிறார். அதற்கான காரணங்களை தமிழ்நாட்டு மக்கள் முன் வைக்க அவரால் முடியுமா?
நூறு வயதைக் கடந்த தோழர் சங்கரய்யா அவர்கள், நம் தமிழ் சமூகத்திற்கு ஆற்றியுள்ள ஒப்புயர்வற்ற சேவையை ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக அங்கீகரிக்க வேண்டும்.
அறிவித்தபடி அறிவித்த நாளில் தோழர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட வேண்டும். அது தான் ஆளுநருக்கும் கௌரவமாக அமையும்.
அனுமதி தருவாரா ஆளுநர் ஆர்.என்.ரவி?