போட்டி மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் அதிகம். சர்வதேச தரத்தில் மூலப்பொருட்களும் கிடைப்பதில்லை. மத்திய, மாநில அரசு உதவாத காரணத்தால் தமிழ்நாட்டில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட சிறு நூற்பாலை தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என, தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு தலைவர் ஜெயபால் கூறியதாவது:
தமிழகத்தில் மொத்தம் 2,000 நூற்பாலைகள் உள்ளன. இவற்றில் 80 சதவீதத்திற்கும் மேல் சிறு நூற்பாலைகள் ஆகும். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக மத்திய மாநில அரசுகளின் சிறு நிறுவனங்களுக்கு பாதகமான தொழில் கொள்கைகளால் கடந்த நான்கு ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூற்பாலைகள் மற்றும் சங்கிலி தொடரில் உள்ள ஜவுளி நிறுவனத்தினர் நஷ்டம் அடைந்து வெளியேறி வருகின்றனர். போட்டி மாநிலங்களை விட மின்சார கட்டணம் அதிகம். மூலப்பொருள் சர்வதேச தரத்துக்கு கிடைப்பது இல்லை. அதே போல் ஒவ்வொரு ஆண்டும் பல மாதங்கள் சர்வதேச விலையை விட மூலப் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
தொழிலாளர் பற்றாக்குறை அதிகம் காணப்படுகிறது. வீவிங் துறையினருக்கு சாய ஆலைகள் மற்றும் பிரிண்டிங் பணிகளை மேற்கொள்ள வட இந்தியாவையே பெரிதும் சார்ந்து இருக்க வேண்டி உள்ளது. இவை அனைத்தும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணங்களாகும்.
ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் உள்ள ஜவுளித்தொழில்துறையினருக்கு ஒரு கோடியே 10 லட்சம் பேல்(ஒரு பேல் 170 கிலோ) பருத்தி தேவைப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் முதல் தர பருத்தி விளைவதோ 3 லட்சம் பேல்கள் மட்டும். அதே போல் ‘பாலியஸ்டர்’, ‘விஸ்கோஸ் பைபர்’ உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்கள் ஒன்று கூட தமிழ்நாட்டில் இல்லை.
மூலப்பொருளுக்கு வட இந்தியாவையே சார்ந்து உள்ளதால் அந்த மாநிலங்களில் இருந்து கொண்டு அவற்றை கொண்டு வருவதற்கு போக்குவரத்து செலவு கிலோவுக்கு 6 முதல் 11 ரூபாய் வரை செலவிடப்படுகிறது. இதனால் உற்பத்தி செலவு அதிகரிக்கிது. பெரும்பாலான நூற்பாலைகள் பயன்படுத்தி வரும் 30 மில்லி மீட்டருக்கு குறைவான பருத்திக்கு இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் நீண்ட இழை பருத்திக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இவற்றை பெரும்பாலும் பெரிய நூற்பாலைகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றன.

விவசாயிகள் நலனை போல் தொழில்துறையினர் நலன் காப்பது முக்கியம்:
நாட்டில் உள்ள பருத்தி விவசாயிகள் பாதிக்கப்பட கூடாது என கூறி கடந்த 2017-18 முதல் அடிப்படை விலை ஆண்டுதோறும் மத்திய அரசு நிர்ணயம் செய்து வருகிறது.
குறைந்த நீளம் கொண்ட பருத்தி(ஒரு குவின்டால்) குறைந்தபட்ச ஆதார விலை, நீண்ட இழை கொண்ட பருத்தி(ஒரு குவின்டால்) குறைந்தபட்ச ஆதார விலை 2017-18 ல் ரூ.4,020, ரூ.4032. 2018-19ல் ரூ.5,150 ரூ.5,450. 2019-20 ரூ.5,255, ரூ.5,550. 2020-21ல் ரூ.5,515, ரூ.5,825. 2021-22ல் ரூ.5,726 ரூ.6,025. 2022-23ல் ரூ.6,080, ரூ.6,380. 2023-24ல் ரூ.6,620, ரூ.7,020. 2024-25ல் ரூ.7,121, ரூ.7,521. 2025-26ல் ரூ.7,710.
மத்திய அரசு ஆண்டுதோறும் ஆதார விலையை உயர்த்தி அறிவித்து வருகிறது. நுகர்வோர்களுக்கு இதே போன்ற திட்டம் அறிவித்து நடைமுறைபடுத்தி இருந்தால் சங்கிலி தொடரில் உள்ளவர்கள் நலிவடைந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டு இருக்காது. நமது நாட்டில் பருத்தி ஏற்றுமதி செய்ய கட்டுப்பாடுகள் இல்லை. அதன் பலனை பன்னாட்டு நிறுவனங்கள் பருத்தி விளையும் சர்வதேச நாடுகளில் வாங்கி இருப்பு வைத்து செயற்கையாக விலை ஏற்றம் செய்து லாபம் அடைந்து வருகின்றனர்.
கடந்த ஐந்தாண்டு காலமாக பருத்தி சீசன் தொடக்கத்திலேயே பருத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ததால் ஆரம்ப விலையே சராசரியாக ஒரு கேண்டி(356 கிலோ) பருத்தி 53,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்து வரும் மாதங்களில் 20/30/40 ரூபாய் கிலோவுக்கு உயர்ந்து வருகிறது.
இதனால் உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிலும் ஆர்டர் பெற முடியாததால் பின்னலாடை நிறுவனங்கள், ஹோம்(வீட்டு உபயோக) டெக்ஸ்டைல்ஸ், காடா உற்பத்தியாளர்கள், மருத்துவ பேண்டேஜ் என ஜவுளி சங்கிலி தொடரில் உள்ள அனைத்து நிலை உற்பத்தியாளர்களும் ஆர்டர்ளை இழக்க நேரிடுகிறது.
பருத்திக்கு மாற்றாக விஸ்கோஸ் பாலியஸ்டர் இழைகளை கொண்டு உற்பத்தியை மேற்கொண்டால் இந்திய தனியார் பைபர் நிறுவனங்களும் சர்வதேச நாடுகளை விட வருடத்தில் சராசரியாக முறையே 14/22 சதவீதம் விலை அதிகமாக விற்பனை செய்கின்றனர். விலை குறைவாக உள்ள சர்வதேச நாடுகளில் வாங்க பருத்தியை போல செயற்கை இழைகளுக்கும் இறக்குமதி வரி விதிக்கப்படுவதால் வெளிநாட்டு ஜவுளிகளை இறக்குமதி செய்து நம்மை விட விலை குறைவாக விற்பனை செய்வதால் உள்நாட்டிலும் நம்மால் போட்டியிட இயலவில்லை.
சிறு நூற்பாலைகள் பயன்பெறும் வகையில் இந்திய பருத்தி கழகம்(சிசிஐ) நிறுவனம் துவங்கப்பட்டது நாளடைவில் வர்த்தகர்களே பராவாயில்லை என்ற அளவிற்கு ‘சிசிஐ’யின் செயல்பாடுகள் உள்ளதால் மத்திய அரசு சிசிஐ நிறுவனத்தின் நோக்கம் மற்றும் கொள்கைகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். பருத்தி மற்றும் செயற்கை இழைகள் சர்வதேச விலை மற்றும் தரத்தில் நாடு முழுவதும் கிடைக்க மத்திய அரசு கண்காணித்து ஏற்றுமதி இறக்குமதி தொழில் கொள்கைகளை வகுத்திட வேண்டும்.
மின்சாரத்தை பொறுத்தவரை குறு சிறு நிறுவனங்கள் மாநில மின்சார வாரியத்தை சார்ந்து உள்ளனர். தாழ்வழுத்த மின்சார நுகர்வோர்கள் தனியார் மின்சாரம் வாங்க சட்ட விதிமுறைகள் இடம் அளிக்காததால் நாட்டிலேயே தமிழகத்தில் உள்ள ‘எல்டி’ ‘சிடி’ நுகர்வோர்கள் ‘ஹெச்டி’ நுகர்வோர்களை விட அதிக மின் கட்டணத்தை செலுத்தி வருவதால் போட்டியிட முடியாத நிலை தமிழ்நாட்டில் உள்ள எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டு காலமாக 480 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட நிலை கட்டணம் மற்றும் டிமாண்ட் கட்டணம் 50 சதவீதம் தமிழக அரசு குறைக்க வேண்டும். தொழிற்சாலை கூரையின் மீது அமைக்கப்பட்ட சோலார் மின்சார உற்பத்திக்கு நாட்டில் எங்கும் விதிக்கப்படாத நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.
பெரிய நிறுவனங்களிடம் மட்டும் கேட்டு திட்டங்களை அறிவிக்காமல் சிறு நூற்பாலைகள் மற்றும் சங்கிலி தொடரில் உள்ளவர்களை கொண்ட கமிட்டி உருவாக்கி அவர்களின் கோரிக்கைகளை கேட்டு மத்திய மாநில அரசுகள் திட்டங்கள் வகுக்க வேண்டும். எம்எஸ்எம்இ தொழில்துறையினரே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மிக அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கி வருகின்றனர். எனவே எம்எஸ்எம்இ தொழில்துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.
இவ்வாறு ஜெயபால் தெரிவித்தார்.



