அரியலூர் அரசு மருத்துவமனை அரங்கிற்கு அனிதா பெயர், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதத்திற்கு குடியரசுத் தலைவரின் பதில், ரத்தாகும் வரை சட்டப்போராட்டம் நடத்துவோம் என்கிற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…என மீண்டும் நீட் தேர்வு ரத்து பேசுபொருளாகி உள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் எனும் தகுதித் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதையடுத்து, தமிழ்நாட்டிலும் கடந்த 2017-ல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200க்கு 1,176 மதிப்பெண் பெற்றும், உச்சநீதி மன்றம் வரை சென்றும் மருத்துவ கனவு பறிபோனதால், அரியலூர் அனிதா உயிரை மாய்த்துக் கொண்டார்.
இது, தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீட் தேர்வு காரணமாக கிராமப்புற, ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோவதாகவும், அதனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாஜக தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
குறிப்பாக 2010ம் ஆண்டு நீட் தேர்வை அறிமுகப்படுத்திய காங்கிரஸ் கட்சியும் இந்த தேர்வை ரத்து செய்யக் கோருகிறது. இதை வலியுறுத்தி தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றதும், நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது விரிவான பரிந்துரைகளை 2021ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி அரசுக்கு அளித்தது.
அதன் அடிப்படையில், 2022 செப்.13-ம் தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்தார். ஒரு கட்டத்தில் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனை ஆளும் திமுக அரசு கண்டித்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆளுநரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வு ரத்து மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தமிழ்நாடு மட்டும் ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறது? என்கிற கேள்வியும் சிலரால் எழுப்பப்படுகிறது. இந்தியாவில் அதிக மருத்துவ கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
கல்வி சார்ந்த விவகாரங்களில், மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் விழிப்புணர்வு அதிகம். குறிப்பாக, மாணவர் சேர்க்கையில், ஒற்றை சாளர முறையை அறிமுகப்படுத்தியதும் இங்குதான். எனவே நீட் தேர்வின் பாதிப்பை உணர்ந்து எதிர்க்கிறது என்கிறார்கள் கல்வியாளர்கள்கள்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கக் கோரி மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்திற்கு, பதில் கிடைத்துள்ளது.
அதில், ‘இந்த மசோதா மத்திய உள்துறையின் மேல் நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் கட்டப்பட்ட அரங்கத்திற்கு அனிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘’நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை சட்டப் போராட்டம் நடத்துவோம்‘ என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? கல்வி உரிமை நிலைநாட்டப்படுமா?