fbpx
Homeபிற செய்திகள்‘வலுவான நிலைத்த பொருளாதார வளர்ச்சிக்கு வழி’ மத்திய நிதிநிலை அறிக்கைக்கு சைமா பாராட்டு

‘வலுவான நிலைத்த பொருளாதார வளர்ச்சிக்கு வழி’ மத்திய நிதிநிலை அறிக்கைக்கு சைமா பாராட்டு

மத்திய நிதிநிலை அறிக்கை வலுவான நிலைத்த பொருளா தார வளர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ளது என்று சைமா கருத்து தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவி சாம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு இந்தியாவை, உலகின் வலிமையான உயர்மட்டப் பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்றுவதற்கு பல்வேறு கொள்கை சார்ந்த முடிவுகளை எடுத்து நிறைவேற்றி வருகிறது.

தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதி நிலை அறிக்கையில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்து, அதில் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, திறன் மேம்பாடு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இது அதிக தொழிலாளர்கள், அதிக மூலதனம் கொண்ட மற்றும் அதிக மின்சாரம் உபயோகிக்கும் ஜவுளித் தொழிலுக்கு பெரிதும் உதவும். அதற்காக பிரதமர், நிதி அமைச்சர், ஜவுளித்துறை அமைச்சர் ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சைமாவின் கோரிக்கையை ஏற்று கூடுதல் நீளமான பருத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கு பொது-தனியார் கூட்டமைப்பில் கிளஸ்டர் டெவலப்மென்ட் இனிஷியேட் டிவ்-ன் கீழ் திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருப்பதற்கு நன்றி.

பருத்தி ரகங்கள்

சைமாவினால் உருவாக்கப்பட்டுள்ள கூடுதல் நீளமான பருத்தி ரகங்கள் சர்வதேச அளவிலான பருத்தி ரகங்களுடன் நன்றாக ஒத்துப்போகின்றன. இந்த திட்டத்தின் கீழ் அதிக உற்பத்தியை பெருக்க சைமாவினால் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் படும்.

இது ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் பயனடையும் வகையில் உள்ளது. நீண்ட இழை பருத்திக்கான பி.டி.தொழில்நுட்பம் அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு, கூடுதல் நீண்ட இழை பருத்திக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கூடுதல் நீண்ட இழை பருத்தியின் தேவை சுமார் 20 லட்சம் பேல்கள் என்ற நிலையில், நாட்டில் வெறும் 5 லட்சம் பேல்களே உற்பத்தியாகின்றன. ஆகையினால், சிறந்த தரமான பருத்திக்கு ஜவுளித் தொழில் இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ளது.

ECLGS திட்டத்தின் (பிணையமில்லா கடன்) கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயனடையும் வகையில் ரூ.9,000 கோடி நிதியை ஒதுக்கியதற்கு நன்றி. இதன் மூலம் 80 சதவீதத்திற்கும் அதிகப்படியாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை கொண்டுள்ள ஜவுளித்துறை மிகுந்த பயன்பெறும்.

ஜவுளித்துறை பயன்பெறும் வகையில் திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்திற்கான (ATUF Scheme) நிதியினை ரூ.650 கோடியில் இருந்து ரூ.900 கோடியாக உயர்த்தியதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இறக்குமதி செய்யப்படும் பருத்தி வகைகளுக்கு அவற்றின் நீளத்தைப் பொறுத்து HS குறியீட்டினை பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
ஜவுளி இயந்திர தேவையில் 20 சதவீதம் கூட உள்நாட்டில் உற்பத்தி ஆவதில்லை. இந்திய ஜவுளித்துறை பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்துள்ளது.

ஜவுளி இயந்திரங்களுக்கான அடிப்படை சுங்க வரியை 5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீ தமாக உயர்த்த எடுத்த முடிவை தவிர்த்திருக்கலாம். இம் முடிவு இந்திய ஜவுளித் துறையின் சர்வதேச போட்டித்திறனையும் 1.4.1999 முதல் 31.3.2022 வரை நடைமுறையில் இருந்த தொழில் நுட்ப மேம்பாட்டு நிதித்திட்டம் தற்போது இல்லாத சூழ்நிலையில், மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட PLI திட்டம் மற்றும் PM MITRA திட்டம் ஆகியவற்றின் வெற்றி விகிதத்தை சிறிதளவு பாதிக்கும். இவ்வாறு சைமா தலைவர் ரவிசாம் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img