fbpx
Homeபிற செய்திகள்தேர்தல் விதிமீறல்களுக்கு தேவை கடும் தண்டனை!

தேர்தல் விதிமீறல்களுக்கு தேவை கடும் தண்டனை!

கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடுமையான வெப்ப நிலை பதிவாகி வருகிறது. குறிப்பாக சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடுமையான வெயில் 100 டிகிரியைத் தாண்டி பதிவாகி வருகிறது. சேலத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி வெயில் பதிவானது. ஒருசில மாவட்டங்களில் வெப்ப அலையும் நிலவியது.

வெயில் ஒரு புறம் இப்படி சுட்டெரித்து மக்களை வாட்டி வதைத்தாலும் மறுபுறம் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரசாரமும் சூடாகத் தான் நடந்து கொண்டு இருக்கிறது. பிரசாரத்தில் பங்கேற்கும் கட்சியினருக்கு கணிசமான தொகை வழங்கப்படுவதால் பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் பொதுக் கூட்டங்கள், பேரணிகளில் பெண்கள் குழந்தைகளுடன் பங்கேற்கின்றனர்.

அப்போது, வேட்பாளர்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்புவது, கட்சிக் கொடியை தூக்கிப்பிடிப்பது, குழந்தைகளை பாட வைப்பது என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் கோவையில் பிரதமர் மோடி நடத்திய ரோடு ஷோவில் கூட பள்ளிக்குழந்தைகள் சீருடையில் பங்கேற்றது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

சுட்டெரிக்கும் வெயிலில் பெண்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் வாடி வதங்கி விடுகின்றனர். தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என தேர்தல் ஆணையமும் தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளது.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் இது போன்ற சிறிய விதி மீறல்களாக இருந்தாலும் வாக்காளர்களுக்கு வேட்பாளர் பணம் தருதல் போன்ற பெரிய விதிமீறல்களாக இருந்தாலும் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அதற்காக வழங்கப்படும் தண்டனை மிகக் குறைவாக இருப்பதால் விதிமீறுவோர் இடையே பெரிய தாக்கத்தையோ அச்சத்தையோ ஏற்படுத்துவதில்லை. தலைவர்களாக இருந்தாலும் வேட்பாளர்களாக இருந்தாலும் கட்சியினராக இருந்தாலும் பயப்படும் அளவிற்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

தேர்தல் விதியை ஒரு வேட்பாளர் மீறினால் 10 ஆண்டுகள் அவர் தேர்தலில் நிற்க முடியாது என்று சட்டம் கொண்டு வந்தால், ஓட்டுக்கு பணம் வழங்கும் போக்கு முற்றிலும் ஒழிந்து விடும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஒரு யோசனையை முன்வைத்துள்ளார். நல்ல யோசனை. அதாவது தேர்தல் விதி மீறல்களுக்கு எதிரான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் மென்மை மட்டுமல்ல; கடுமையும் வேண்டும் என்பது தான் அவரது வாதம். கவனம் செலுத்துமா, இந்திய தலைமை தேர்தல் ஆணையம்?

படிக்க வேண்டும்

spot_img