சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கூட்டுறவுத்துறையின் மூலம் 1,63,637 விவசாயிகளுக்கு ரூ.1,213.40 கோடி மதிப்பீட்டில் பயிர்கடன் மற்றும் 6,206 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.195.63 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 07.05.2021 அன்று ஆட்சி பொறுப்பேற்றவுடன் 5 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். அதில் ஒன்று விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்களின் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பெண்கள் சமுதாயத்தில் யாரையும் சாராமல் பொருளாதாரத்தில் தங்களுடைய சுய உழைப்பின் மூலம் முன்னேற்றம் பெற மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கினார். இதன்மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து கூட்டுறவுத்துறையின் மூலம் கடன் பெற்று சுயதொழில்கள் மூலம் வருவாய் ஈட்டி சமூதாயத்தில் முன்னேற முடியும். அதன் அடிப்படையில் பெண்கள் சுய தொழில் புரிவதற்கு கூட்டுறவுத்துறையின் மூலம் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்ததாவது:
கூட்டுறவுத்துறையின் மூலம் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக் கடன், சுய உதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், நகைக்கடன், மத்திய காலக்கடன், பண்ணைசாராக் கடன், வீடு அடமானக்கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்த வட்டியில் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற 17 வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கூட்டுறவுத்துறையின் மூலம் 1,63,637 விவசாயிகளுக்கு ரூ.1,213.40 கோடி மதிப்பீட்டில் பயிர்கடன் மற்றும் 6,206 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.195.63 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 205 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் 5 பெரும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர்க்கடன் வழங்கப்படுகின்றன. கடன் பெற்ற தேதியில் இருந்து ஓராண்டு காலத்திற்குள் கடனை முழுவதும் திருப்பி செலுத்துவோருக்கு 7 சதவீத வட்டியினை தமிழக அரசே ஏற்று கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் வேளாண் பணிகளுக்காக கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று பயன்பெறலாம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கூட்டுறவுச் சங்கங்களில் 25,837 விவசாயிகள் புதிய உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு ரூ.154.55 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வளர்ப்பு உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்க கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு 2021-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 25,911 விவசாயிகளுக்கு ரூ.105.69 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்த வட்டியில் தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழக திட்டத்தின் கீழ் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,044 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9.95 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் பெற்றக் கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்துவோருக்கு வட்டியினை தமிழ்நாடு அரசே ஏற்று கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி வருகிறது.
சேலம் மாவட்டத்தில் 5,241 மகளிர் சுய உதவிக்குழுக்கள் (51,023 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள்) கூட்டுறவு சங்கங்களில் பெற்ற ரூ.134.40 கோடி கடனை தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்தது. சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 6,206 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.195.63 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், நில உடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களைத் தொடர்பு கொண்டு கடன் பெறுவதற்கான உரிய விண்ணப்பத்தினை சமர்ப்பித்து, பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்றுப் பயனடையலாம்.
‘தொழில்முனைவோராகி விட்டேன்’
சேலம் மாவட்டம், சின்னதிருப்பதி, மீனம் மகளிர் சுய உதவிக் குழுவினைச் சேர்ந்த எஸ்.மேரி தெரிவித்ததாவது:
கணவர் இறந்து விட்டார். . எனது இரு மகன்களும் உயர்கல்வி பயின்று வருகின்றனர். மீனம் மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினரானேன். எங்கள் குழுவில் 14 பெண்கள் உள்ளோம். கடந்த 30.09.2022 அன்று சின்னதிருப்பதி நகர கூட்டுறவுக் கடன் சங்கத்தின் மூலம் ரூ.14 லட்சம் கடன் பெற்றோம்.
இதன்மூலம் ரூ.1 லட்சத்தை மூலதனமாகக் கொண்டு சுயமாக தையல் இயந்திரம் வாங்கி மகளிர் ஆடைகளை வடிவமைக்கும் சிறு தொழில் செய்து வருகிறேன். என்னால் சுயமாக மாதம் ரூ.20,000/- வருமானம் பெற முடிகிறது. பெற்ற கடனுக்காக மாதம் ரூ.3,000/- தொகையைத் திருப்பிச் செலுத்தி வருகிறேன்.எனது வருமானத்தினால் குடும்பத்தின் பொருளாதாரம் மேம்பட்டு, மகன்களின் படிப்புச் செலவிற்கு உதவிகரமாக உள்ளது. ஏழைப் பெண்களை சமுதாயத்தில் யாருடைய உதவியுமின்றி வாழ வழிவகுத்து, சிறந்த தொழில் முனைவோராக உருவாக்கிய முதல்வருக்கு நன்றி என்றார்.
‘வட்டியில்லா கடனால் வாழ்வு செழிக்கிறது’
சேலம் மாவட்டம், வெள்ளாளப்பட்டி பகுதி செல்வம் (வயது 55) தெரிவித்ததாவது:
சொந்தமாக 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நிலத்தில் வாழை பயிரிடுவதற்காக வெள்ளாளப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் மனு அளித்தேன். எனக்கு ரூ.58,000/- ஒரு வருடத்திற்கு வட்டியில்லாக் கடனாக வழங்கினார்கள்.
தற்போது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளேன். இதன்மூலம் ஆண்டிற்கு ரூ.1,10,000/- வருமானம் கிடைக்கிறது. சிறு, குறு விவசாயிகளின் வேளாண் பயிர் சாகுபடிக்கு வழிவகை செய்த முதல்வருக்கு நன்றி என்றார்.
‘விவசாயியான பொறியியல் பட்டதாரி’
சேலம் மாவட்டம், கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதி ஆர். முகேஷ் குமார் (வயது 25) கூறியதாவது:
சிறு வயதிலேயே பெற்றோர் இறந்து விட்டனர். நான் பி.இ., பட்டதாரி. எனக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நான் கால்நடை வளர்ப்பு மற்றும் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்வதற்கு கொண்டப்பநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தினை அணுகினேன்.
அலுவலர்கள் கடந்த 22.12.2022 அன்று கறவை மாடு வாங்குவதற்காக ரூ.66,000/- வழங்கினார்கள். தினமும் 20 லிட்டர் பால் கறக்கும் பசு மாட்டினை வாங்கினேன். கால்நடை வளர்ப்பின் மூலம் உற்பத்தி செய்யும் பாலினை அருகில் உள்ள பால் கூட்டுறவுச் சங்கத்திற்கு காலை நேரத்தில் 10 லிட்டர், மாலையில் 8 லிட்டர் என மொத்தம் நாளொன்றிற்கு 18 லிட்டர் பால் வழங்கி வருகிறேன். இதன்மூலம் எனக்கு மாத வருமானமாக ரூ.17,000/- பெற முடிகிறது.
எனது விவசாய நிலத்தில் வாழை சாகுபடி செய்திட கடந்த 30.12.2022 அன்று பயிர்கடனாக ரூ.69,000/- பெற்றேன். இதன்மூலம் ஆண்டிற்கு ரூ.60,000/- வருமானம் ஈட்ட முடிகிறது. இதனை முதல் ஒரு வருடத்திற்கு எனக்கு வட்டியில்லாக் கடனாக வழங்கியுள்ளார்கள்.
இளைஞர்களுக்கு சுயதொழில் புரிய கடனுதவிகள் வழங்கிய முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.
சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தைப் பெற்று ரூ.110 பங்குத்தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் கடன் மனுவை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெறலாம்.
கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களை கூட்டுறவுச் சங்கங்களில் பெற்றுப் பயனடையலாம்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களை அணுகி தங்களுக்குத் தேவையான கடனுதவிகளைப் பெற்று, தங்களுடைய வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் தெரிவித்தார்.
தொகுப்பு:
ச. சுவாமிநாதன்,
செய்தி – மக்கள் தொடர்பு அலுவலர்,
சேலம் மாவட்டம்.



