fbpx
Homeபிற செய்திகள்டிரம்ப் முயற்சியால் ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தம்?

டிரம்ப் முயற்சியால் ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தம்?

2022ஆம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போர், மூன்று ஆண்டுகளாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. இடையில் எத்தனையோ சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்தும், எதற்கும் பலனில்லை.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தின் கீழ், ரஷ்யா – உக்ரைன் நாடுகளின் பிரதிநிதிகள் கடந்த வாரம் இஸ்தான்புல்லில் 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சந்திப்பு மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்களால் ஒரு போர் நிறுத்த உடன்பாட்டை எட்டமுடியவில்லை.


போர் நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாக உக்ரைன் கூறுகிறது. முதலில் சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று ரஷ்யா கூறுகிறது.
இந்நிலையில் நேற்றைய தினம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இருவரும் 2 மணி நேரம் உரையாடி உள்ளனர்.


அதனைத் தொடர்ந்து “ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும்“ என்று டிரம்ப் சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளார். “புதின் உடனான உரையாடலின் தொனியும் உணர்வும் சிறப்பாக இருந்தது” என்றும் அவர் பாராட்டி உள்ளார்.


அதேபோல மாஸ்கோ – கீவ் நேரடி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு டிரம்ப் அளித்த ஆதரவை புதினும் வெகுவாகப் பாராட்டி உள்ளார். அவர் இதுவரை இல்லாத அளவுக்கு வெளிப்படையான தகவலை அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒப்பந்தங்கள்” எட்டப்பட்டால் உக்ரைனுடன் போர்நிறுத்தம் சாத்தியமாகும்“ என்று தெரிவித்துள்ளார். இதெல்லாம் போர் நிறுத்தத்திற்கான சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.


ஆக, திடீர் திருப்பமாக டிரம்ப் – புதின் நீண்டநேர தொலைபேசி உரையாடல் மூலம் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை துளிர்த்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு புதினும் ஜெலன்ஸ்கியும் ஒப்புக்கொண்டுள்ளனர். இது விரைவில் செயல்வடிவம் பெற்று போர் முடிவிற்கு வரவேண்டும் என்பதைத் தான் உலகமே எதிர்பார்க்கிறது.


விரைவில் புதின் – ஜெலன்ஸ்கி சந்திப்பு நிகழட்டும். போர் நிறுத்தம் மலரட்டும்!

படிக்க வேண்டும்

spot_img