fbpx
Homeபிற செய்திகள்ரிதன்யா தற்கொலை உணர்த்தும் பாடம்!

ரிதன்யா தற்கொலை உணர்த்தும் பாடம்!

திருப்பூர் பெண் ரிதன்யாவுக்கு 300 சவரன் நகை போட்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். 3 மாதத்துக்குள் தம்பதிக்குள் பலமுறை தகராறு வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் ரிதன்யாவின் பெற்றோர் சமாதானம் செய்துள்ளார்கள்.


ஆனால், கடைசி முறை புதுமணத் தம்பதிக்குள் சண்டை வந்தபோது, அதற்கு மேல் அந்த பெண்ணால் தாங்கி கொள்ள முடியாமல், விஷம் குடித்து இறந்துவிட்டார்.
கடைசி நேரத்தில் தன்னுடைய அப்பாவிடம் பேச ரிதன்யா நினைத்துள்ளார்.

அவர் இதை சாதுர்யமாக கையாண்டிருக்கலாம். ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் உறுதியாக இருந்தால், தனித்துகூட வாழ்ந்திருக்கலாமே? அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டார். வெறும் நகைக்காக மட்டுமே இந்த பிரச்சனை நடந்தது போல தெரியவில்லை. கணவனுக்கும், மனைவிக்கும் வேறு பிரச்னை கூட இருந்திருக்கக் கூடும்.


வீட்டில் வந்து உட்கார்ந்து விட்டால், அப்பா அம்மா நம்மை பார்த்து பார்த்து ஏங்கி கவலைப்படுவார்கள், நமக்கும் வேறு வாழ்க்கை வாழ பிடிக்கவில்லை என்பதற்காக இந்த முடிவை ரிதன்யா எடுத்துள்ளார்.


இதற்கு காரணம், உடைகள் நாகரீகமாக இருக்கிறதே தவிர உள்ளத்தில் நாகரீகம் ஏற்படவில்லை. இன்னும் பலரும் பழமையை பிடித்து கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.


ஆனால் இன்றைய சூழலில் அனைத்தையுமே எதிர்கொள்ளும் பழக்கத்தைக் கற்றுத்தரும் வெளிஉலகத்தை காட்டாமலேயே பெண்ணை வளர்த்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. மகளை நிதன்யாவின் அப்பா இன்னும்கூட தைரியமாக வளர்த்திருக்கலாம்.


“மாற்று வாழ்க்கையை அமைப்பது என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. என் பொண்ணு ஒருவனுக்கு ஒருத்தின்னு சொல்லி இறந்துட்டா. அதுல எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறதுஎன மகளின் மரணத்துக்கான காரணத்தை உயர்த்திப் பிடிக்கும் ரிதன்யாவின் தந்தையின் கூற்று மிகவும் பிற்போக்குத் தனமானது தான்.

ஆனாலும் வேதனையான மனநிலையில் அவர் கூறிய இந்த வார்த்தைகளைப் பெரிதுப்படுத்தத் தேவையில்லை. அதே நேரத்தில்தற்கொலை முடிவு தவறானது. வாழ்ந்து காட்ட வேண்டும்“ என்பதையும் ரிதன்யாவின் தந்தை சொல்லத் தவறவில்லை. மறுமணம் அவரவர் விருப்பம் என்பதிலும் உடன்பட்டுள்ளார். அவருடைய இந்த முற்போக்கு நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.


ஒருகாலத்தில் நடிகைகள் காதல் தோல்வியால் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டனர். ஆனால், தற்போதுள்ள ஒரு உச்ச நடிகை 3 காதலை கடந்து வந்துள்ளார். அதில் ஒருவரது பெயரை, தன்னுடைய கையில் பச்சைக் குத்தியிருந்தார்..

அதையெல்லாம் கடந்துதான் இன்று நடிகை அந்த உச்சத்துக்கு வந்துள்ளார்.
எனவே, வாழ்வில் எந்த ஒரு விஷயம் நடந்தாலும் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அடுத்ததாக, அந்த விஷயத்திலிருந்து வெளியே வர தெரிந்திருக்க வேண்டும். தைரியத்தை மட்டும் எப்போதுமே விட்டுவிடக்கூடாது. எவ்வளவு சிக்கல் வந்தாலும், அடுத்து என்ன? என்ற கேள்விக்கு நகர்ந்துவிட வேண்டும்.


அதற்கு உலக அறிவோடு கூடிய கல்வி தான் வழிகாட்டும். வெறும் ஏட்டுக் கல்வியோடு நின்று விடாமல் நட்பு, வாசிப்பு, பணியிடம் என பயணப்படும்போது தான் வாழ்க்கையில் தெளிவு பிறக்கும். பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றி குறைந்தபட்ச அறிவாவது பெண்களுக்கு இருக்க வேண்டும்.


ஆக, நிதன்யாவின் தற்கொலையை யாருமே நியாயப்படுத்தி முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எத்தனையோ பெண்கள் தங்களது திருமண வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தும்கூட, அதை உதறித்தள்ளி படித்து இன்று மாவட்ட ஆட்சியராக உள்ளார்கள். டாக்டர்களாக உள்ளார்கள். பல பெண்கள் இன்று சமுதாயத்தில் உச்சத்தில் உள்ளார்கள்.


இவர்களை முன்னுதாரணமாக கொள்ள வேண்டுமே தவிர, தற்கொலை ஒருபோதும் தீர்வாகாது என்பதை புரிந்து கொள்ளாமல் ரிதன்யா உயிரை மாய்த்துக் கொண்டாலும், தற்கொலை ஒருபோதும் தீர்வாகாது என்பதையும் உணர்த்திச் சென்றிருக்கிறார் என்பதை மனதில் கொள்வோம்!

படிக்க வேண்டும்

spot_img