Homeபிற செய்திகள்தூத்துக்குடி ஆலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.25லட்சம் நிவாரண நிதி

தூத்துக்குடி ஆலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.25லட்சம் நிவாரண நிதி

தூத்துக்குடி தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்திற்கு நிறுவனத்தின் சார்பில் ரூ.25லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. இதையடுத்து உறவினர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

தூத்துக்குடி மாவட்டம், மஞ்சநீர்காயல் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன் மகன் ஹரிகரன் (23). இவர் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பிற்பகலில் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் ஹரிகரன் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், உரிய இழப்பீடு வழங்கக் கோரி ஹரிகரனின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் நேற்று காலை வருவாய் கோட்டாட்சியர் பிரபு, தாசில்தார் முரளிதரன், ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா, திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ், மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிற்சங்கங்கள் சார்பில் சிஐடியூ பொன்ராஜ், ரசல், அதிமுக டாக் ராஜா, வக்கீல் யுஎஸ் சேகர், தேவேந்திர மக்கள் பேரவை எஸ்ஆர் பாண்டியன், தமிழர் விடுதலைகளம் ராஜேஷ் மற்றும் ஹரிகரனின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில், ஹரிகரனின் பெற்றேர்களுக்கு குடும்ப ஓய்வு ஊதியமாக மாதம் ரூ.10,000 வழங்கப்படும், நிறுவனம் சார்பாக உடனடியாக ரூ.25 லட்சம் குடும்பத்திற்கு கசோலையாக வழங்கப்படும், குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உடனடியாக எடுத்துக்கொள்ளும் வகையில் காசோலை வழங்கப்படும், நிறுவனம் சார்பாக பெற்றோர்களுக்கு உடனடி செலவினங்களுக்கு உதவும் வகையில் ரூ.2 லட்சம் ரொக்கமாக வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து நிர்வாக மேலாளர் ஜெயப்பிரகாஷ் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார். இதையடுத்து குடும்பத்தின் சார்பாக கலந்து கொண்ட உறவினர்கள், மற்றும் அமைப்பின் தலைவர்கள் கூட்ட முடிவுகளை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு பிரேத பரிசோதனை முடித்து உடலை பெற்றுக்கொண்டு நல்லடக்கம் செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img