எளிமையான குடும்பத்தில் பிறந்து பணிவான சேவகனாக மாறி, இன்று உலக அரங்கில் செல்வாக்கு மிக்க தலைவராக உருவெடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனது 74-ஆவது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடி இருக்கிறார். நாடே கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது.
குஜராத்தின் முதலமைச்சராக 13 ஆண்டுகள் பதவியில் இருந்தபோது, பிரதமர் மோடி ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என்று கூறுவார்கள். 1947-இல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
இந்திரா காந்திக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக அறுதிப் பெரும்பான்மையைப் பெற்ற முதல் இந்தியப் பிரதமரும் மோடி தான்.
பிரதமர் மோடிக்கு எக்ஸ் சமூக வலைதளத்தில், 10 கோடிக்கும் அதிகமான பாலோவர்கள் இருப்பதால் சமூக ஊடகத் தளத்தில் மிகவும் பிரபலமான உலகத் தலைவர்களில் ஒருவராக உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா ஒவ்வொரு நாளும் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாற்றை உருவாக்கி வருகிறது. பொருளாதாரம் முதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு வரை, தடுப்பூசிகள் முதல் காப்பீடு வரை, உலக அரங்கில் இந்தியா மாபெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது.
பிரதமரின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்குகிறது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 12 கோடி குடும்பங்களில் உள்ள 55 கோடி இந்தியர்களை உள்ளடக்கியது. தற்போது 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மோடி தலைமையிலான ஆட்சியில், சந்திரயான்-3, சந்திரனின் தென் துருவத்தில் சாஃப்ட்-லேண்ட் செய்யப்பட்டு வரலாறு படைத்துள்ளது. விரைவில், இந்தியா தனது சொந்த விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பவுள்ளது.
யூபிஐ மூலம், மொபைல் கட்டண முறையை மிகப்பெரிய அளவில் அறிமுகப்படுத்திய முதல் நாடாக இந்தியா ஆனது. டிஜிட்டல் வர்த்தகத்தை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடு இந்தியா தான். உலகிலேயே மிக வேகமாக 5ஜியை அறிமுகப்படுத்திய நாடும் இந்தியா தான்.
உலகின் மிக உயரமான சிலை, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம், உலகின் மிக உயரமான ரயில்வே பாலம், ஆசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை, உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி பூங்கா உள்ளிட்டவை உலகளவில் இந்தியாவின் தனித்த அடையாளங்களாக அமையப் பெற்றது பிரதமர் மோடியின் ஆட்சியில் தான்.
மணிப்பூரில் அடங்காத கலவரம், பாஜக ஆளாத மாநில அரசுகளுக்கு பேரிடர் நிவாரண நிதியைக்கூட தராமல் இழுத்தடிப்பு, தமிழகம் உள்ளிட்ட சில மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றும் மசோதாக்கள், கோப்புகளுக்கு அனுமதி தராமல் இழுத்தடிக்கும் ஆளுநர்கள்…இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் எதிர்க்கட்சிகள் பட்டியலிட்டு விமர்சித்து வருகின்றன. அதில் உள்ள நியாயத்தையும் புறந்தள்ளி விட முடியாது.
இருந்தபோதிலும் உலகளவில் மிகவும் பிரபலமான தலைவராக தொடர்ந்து தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பிரதமர் மோடி, இந்தியாவை உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்றியுள்ளாரே.
உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிர வைத்திருக்கும் பிரதமர் மோடியின் சாதனை பயணம் நீடூழி காலம் தொடரட்டும்!



