Homeபிற செய்திகள்சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே கார் மோதிய விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை, மகனை இழந்த துயரத்திலும் அவரது பெற்றோர் தானமாக வழங்கினர். இந்த மனிதநேய செயல் பலரது உயிரை காப்பாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமகிரிப்பேட்டை அருகே வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த சடையப்பன்-கவிதா தம்பதியின் மகன் தீபக் (வயது 26). கடந்த 16-ந் தேதி நாமக்கல் கீரம்பூரில் உள்ள தாத்தா வீட்டுக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வெள்ளக்கல்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

புதுச்சத்திரம் அருகே தனியார் கல்லூரி பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியதில் தீபக்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு 9 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தீபக்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவர் மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். தீபக்கின் உடல் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, இரு கண்கள், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.
இதில் இதயம் மற்றும் நுரையீரல் சென்னைக்கும், சிறுநீரகங்கள் கோவைக்கும் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

மகனை இழந்த துயரத்திலும், பிற உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோரின் முடிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் உறுப்பு தானம் மூலம் ஒருவரின் மறைவுக்குப் பிறகும் பலருக்கு புதிய வாழ்வு கிடைக்கலாம் என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
தீபக் உடலுக்கு அரசு சார்பில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img