தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மதுரையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் செப்டம்பர் 28-ல் நடைபெற்ற இத்திட்ட விழாவில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் கு.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற அரசு விழாவில், ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைத்தார். இத்திட்டத்திற்காக ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் 22 முதல் செப்டம்பர் 26 வரை கணக்கெடுக்கப்பட்டு, மொத்தம் 3,202 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்படவுள்ளது.
இதன்படி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 1,779 குழந்தைகளுக்கும், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 999 குழந்தைகளுக்கும், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் 424 குழந்தைகளுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
முதற்கட்டமாக இன்றைய தினம் தூத்துக்குடி அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் 50 குழந்தைகளுக்கும், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 35 குழந்தைகளுக்கும், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் 26 குழந்தைகளுக்கும் என மொத்தம் 111 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்படவுள்ளன.
மீதமுள்ள குழந்தைகளுக்குக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், நாள்தோறும் காலையில் 25 குழந்தைகளுக்கும், மாலையில் 25 குழந்தைகளுக்கும் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் அழைப்பிதழ்கள் வழங்கப்படும். அழைப்பிதழ் பெற்றுள்ள தாய்மார்கள் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் வந்து மோதிரத்தைப் பெற்றுச் செல்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், தூத்துக்குடி சார் ஆட்சியர் விவேக் யாதவ், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. எபனேசர் ஜோயல் குமார், நலப்பணிகள் இணை இயக்குநர் மரு. பிரியதர்ஷினி, மாவட்ட சுகாதார அலுவலர் (தூத்துக்குடி) மரு. யாழினி, கல்லூரி துணை முதல்வர் மரு. கலைவாணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தாய்மார்கள் பலர் உடனிருந்தனர்.



