மக்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்வதில் முக்கிய கவனம் செலுத்தும் எடெல்வீஸ் டோக்கியோ லைப் இன்சூரன்ஸ், 3 வார உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பயணத்தை ஐதராபாத்தில் துவக்கியது.
‘ஜிந்தகி எக்ஸ்பிரஸ்’ என்னும் பெயரிலான இந்த மராத்தான், இந்தியா முழுவதும் 5500 கிலோ மீட்டர் செல்லவிருக்கிறது. பயணத்தின் நோக்கம் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகும்.
தொடர்ந்து 4வது ஆண்டாக நடைபெறும் இந்த விழிப்புணர்வு பயணத்தில் மோகன் பவுண்டேஷனும் இணைந்துள்ளது. லாப நோக்கமில்லாத இந்த அமைப்பு கடந்த 1997-ம் ஆண்டு முதல் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
வாழ்க்கைக்குப் பிறகும் வாழ்க்கை
இது குறித்து எடெல்வீஸ் டோக்கியோ லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சுமித் ராய் கூறியதாவது:
கடந்த 2019-ம் ஆண்டில், ‘வாழ்க்கைக்குப் பிறகும் வாழ்க்கை’ என்ற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வில், உடல் உறுப்பு தானம் குறித்து தவறான கருத்துகள் அனைவரிடத்திலும் பரவலாக இருப்பது குறித்து தெரிய வந்தது.
மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை தொடர்பான மத நம்பிக்கைகள், உடல் உறுப்பு தானம் செய்வதில் குடும்பத்தினரின் தயக்கம், சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பில் அவநம்பிக்கை ஆகியவையும் ஆய்வின் மூலம் தெரியவந்தது.
கடந்த 3 ஆண்டுகளாக டிஜிட்டல் முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த இந்நிறுவனம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை இந்தியா முழுவதும் நேரடியாக கொண்டு செல்வது என்று முடிவு செய்து ‘ஜிந்தகி எக்ஸ்பிரஸ்’ என்னும் 3 வார கால பயணத்தை துவக்கியது.
பயணம் 50 நகரங்களுக்கு செல்கிறது. ஐதராபாத்தில் துவங்கிய இந்த பயணம் 12 நகரங்களில் உள்ள இதன் கிளைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு அமர்வுகள், மோட்டார் சைக்கிள் பேரணிகள், வாக்கத்தான் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. வரும் 22-ம் தேதி போபாலில் பயணம் நிறைவு பெறுகிறது என்றார்.
விழிப்புணர்வு பிரச்சாரத்தை எடெல்வீஸ் நிறுவனம் துவக்கிய 2019-ம் ஆண்டில், ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான உடல் உறுப்பு தான உறுதிமொழிகளை அதாவது 54,626 உறுதிமொழிகளை பெற்று புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்தது.



