நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்லத்தில் இன்று (3ம் தேதி) உதகை 200 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டியும், சிறு விளையாட்டு
பூங்கா அமைப்பதற்கான திட்டத் தினை தொடங்கி வைப்பதற்காகவும், உதகை அல்ட்ரா, ரோட்டாஜீ ஒட்டகமந்து சங்கத்துடன் இணைந்து நடத்திய
மாபெரும் 90 கி.மீ. மாரத்தான் – 2023 ஓட்டத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்
கொடியசைத்து துவக்கி வைத்து, 30 கி.மீ. மாரத்தான் ஓட்டத்தில் தனது 140-வது மாரத்தான் ஓட்டத்தினை மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணி யன் தெரிவித்ததாவது:- ஊட்டி அல்ட்ரா அமைப்பு தொடர்ந்து பல ஆண்டு காலமாக மாரத்தான் போட்டி நடத்தி வருகிறார்கள். அதன் மூலம் பல வகையான சமூக கண்ணோட்டத்துடன் பல பிரச்சனைகளை முன்னிறுத்தி, அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்வுகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு ஒரு சிறு விளையாட்டு பூங்கா அமைப்பதற்கான திட்டத்தினை தொடங்கி வைப்பதற்காகவும், உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவுபெறுவதை ஒட்டியும், 90 கி.மீ, 60 கி.மீ, 30 கி.மீ, 15 கி.மீ, மாரத்தான் போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் நான் 30 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொள்கிறேன். இது எனது 140-வது மாரத்தான் ஓட்டமாகும். இந்த மாரத்தானில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா பெருந்தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடங்கி தொடர்ச்சியாக பல அலைகளை ஏற்படுத்தி மிக பெரிய பேரிடரும், பாதிப்பும் உலகம் முழுவதும் ஏற்படுத்தியது. கடந்த ஆறு முதல் ஏழு மாதங்களாக உலக அளவில் தொற்று இல்லாத நிலையில் இருந்தது.
ஆனால் தற்பொழுது கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. குறிப்பாக இந்தியாவிலும் மீண்டும் ஒமிக்கிரான் உருமாறிய தொற்று அதிகரித்துள்ளது. XBB, BA2 போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. உலக அளவில் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
இந்தியாவில் 50க்கும் கீழே இருந்த தொற்றின் எண்ணிக்கை, தற்பொழுது அதிகரித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஹிமாச்சல் பிரதேஷ், டெல்லி போன்ற மாநிலங்களில் 300 முதல் 700 நபர்கள் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் 139 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனை, துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார அரசு மருத்துவமனை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 11,333 மருத்துவ கட்டமைப்புகள் உள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, உள்நோயாளிகள், புறநோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ சார்ந்த களப்பணியாளர்கள் அனைவரும் முககவசம் அணிவது கட்டாயமாக் கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மேட்டுப்பா ளையம் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்தபோது, அங்கு 100 சதவீதம் முககவசம் அணிந்திருந்தது நான் பார்வையிட்டேன்.
தமிழகத்தில் பொறுத்தவரை ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதி, மருந்து மாத்திரை வசதி ஆகியவை மிகப்பெரிய அளவில் தயார் நிலையில் உள்ளது.
ஏற்கனவே இரண்டாம் கொரோனா அலையில் பெற்ற அனுபவத்தை வைத்து, அரசால் பல்வேறு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆயிரம் படுக்கை வசதியுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேட்டுப்பாளையம் பகுதியில் 20 படுக்கை வசதிகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த XBB, BA2 வைரஸ் சிறிய பாதிப்பு ஏற்படுவதால், பொது மக்கள் எந்த பதற்றமும் அடைய வேண்டாம். தொற்றினால் பாதிக் கப்பட்ட நபர்கள் தங்களை தனி மைப்படுத்திக் கொள்வதோடு, மருத்துவர்கள் ஆலோசனைகள் படி மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
பரிசோதனைகள்
ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் படி, விமான நிலையத்தில் வெளி நாடுகளில் இருந்து வருபவர்கள் ரேண்டம் முறையில் இரண்டு சதவீதம் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக இரண்டு அல்லது மூன்று நபர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது.
தற்போது துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து வரும் நபர்களை பரிசோதனை செய்யும் போது எட்டு முதல் பத்து நபர்களுக்கு, இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் அனைவரையும் வீடுகளில் தனிமை படுத்திக் கொள்ளவும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.பாலுசாமி, மண்டல மேலாளர் (தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்), வெங்கடேஷன், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், உதகை வட்டாட்சியர் ராஜசேகரன், உதகை அல்ட்ரா இயக்குநர் கண்ணன் சுந்தரராஜன், உதகை ரோட்டாஜீ நிர்வாகி கமலேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



