தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வாக்காளர்களிடம் தேர்தல் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான க. தர்ப்பகராஜ் நேற்று (20ம் தேதி) திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையத்தில் நேரடியாக வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டார். பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஒட்டி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார்.
மேலும், பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாநகராட்சி சமுத்திரம் பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடி மையத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர், தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ம.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) தனபதி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் செல்வம், மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வடிவேலன், வட்டாட்சியர் மோகன்ராமன் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



