பவானிசாகர் பகுதியில் பட்டரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200 ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஈரோடு எஸ் பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தமிழ்நாடு ஒக்கலிக சமுதாய மக்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் முன்னாள் டிஎஸ்பி வெள்ளியங்கிரி தலைமையில் அவர்கள் கூறியதாவது: கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி ஒக்கலிகா சமுதாய மக்களுக்கும் ஆதிதிராவிட மக்களுக்கும் தலா மூன்று ஏக்கர் நிலம் அரசால் வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர்கள் தங்கள் நிலத்தில் வீடுகளை கட்டி உள்ளனர்.
ஒக்கலிகா சமுதாயத்தினர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் கோவில்களை கட்டி உள்ளனர். ஆனால் ஒக்கலிகா மக்கள் நிர்ப்பந்தத்தின் காரணமாக 50 சென்ட் நிலத்தை ஆதிதிராவிடர்களுக்கு வழங்கினர். ஆனால் தற்போது ஆதி தமிழர் பேரவை தூண்டுதல் காரணமாக ஒக்கலிகா சமுதாயத்துக்கு சொந்தமான எஞ்சிய இரண்டு ஏக்கர் நிலத்தை சமுதாயக்கூடம் கட்ட ஆதி திராவிடர்கள் கேட்கின்றனர்.
ஒக்கலிகா மக்கள் நிலத்தை தர முடியாது என கூறவே சிலர் எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஒக்கலிகா மக்கள் மீது பொய் புகார் அளித்தனர். பவானிசாகர் போலீசார் அதன் பெயரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
எனவே எஸ் பி இந்த விஷயத்தில் தலையிட்டு பொய் புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். ஒக்கலிகா மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களது நிலத்தை வேறு யாரும் உரிமை கோராமல் இருக்க உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்து இருந்தனர்.