fbpx
Homeபிற செய்திகள்கோவை பழக்கடைகளில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு: ரசாயனம் மூலம் பழுக்க வைத்த ரூ.12.5 லட்சம் மதிப்பிலான...

கோவை பழக்கடைகளில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு: ரசாயனம் மூலம் பழுக்க வைத்த ரூ.12.5 லட்சம் மதிப்பிலான மாம்பழங்கள், சாத்துக்குடி பறிமுதல் குப்பை கிடங்கில் அரைத்து அழிக்கப்பட்டது

கோவை பழக்கடைகளில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது ரசாயனம் மூலம் பழுக்க வைத்த ரூ.12.5 லட்சம் மதிப்பிலான 25 டன் மாம்பழங்கள், சாத்துக்குடி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவின்பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கே.தமிழ்செல்வன் தலைமையில் உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு கோவை வைசியாள் வீதி, பெரிய கடைவீதி, பவள வீதிகள், கருப்பணகவுண்டர் வீதி, முத்து விநாயகர் கோவில் வீதி, தர்மராஜா கோவில் வீதி, கெம்பட்டி காலனி வீதி பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டது.
அதிகாரிகள் 8 குழுவாக மொத்தம் 18 பேர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். 45 கடைகள், குடோன்களில் நடந்த ஆய்வில் 16 கடைகள் மற்றும் குடோன்களில் மாம்பழங்கள், சாத்துக்குடி பழங்களைப் பழுக்க வைப்பதற்காக சிறிய ரசாயன பொட்டலங்களை பழப்பெட்டிகளுக்குள் போட்டு வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 22.5 டன் மாம்பழங்களும் 2.5 டன் சாத்துக்குடி பழங்களும் மொத்தம் 25 டன் பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த பழங்கள் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் உரம் தயாரிப்பதற்காக அரைத்து அழிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பழங்களின் மொத்த மதிப்பு ரூ.12 லட்சத்து 56 ஆயிரத்து 400 ஆகும்.


ஆய்வு செய்யப்பட்ட 16 கடைகள் மற்றும் குடோன்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது போன்று சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வில் செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுத்திய ரசாயன பாக்கெட்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.


கார்பைட் கல், எத்திலீன் ரசாயன பவுடர் பாக்கெட்டுகளைக் கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்பதால் வயிறு தொடர்பான பிரச்னைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி – பேதி போன்ற உபாதைகள் உண்டாகலாம். சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதில் ஆர்சானிக் மற்றும் பாஸ்பரஸ் இருந்தால் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு உடல் வலுவிழக்க வாய்ப்புள்ளது.


எனவே, இதுபோன்று முறையற்ற விகிதத்தில் ரசாயனம் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைப்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற குறைபாடுகளைக் கண்டறிய நேரிட்டால் 94440 42322 என்ற உணவுப்பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img