ஈக்விட்டி சந்தை தரவரிசை பட்டியலில் தொடர்ந்து 5ம் ஆண்டாக, உலக அளவில் 3வது இடம் பிடித்து தேசிய பங்கு சந்தை நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
என்எஸ்இ குழுமத்தின் இந்திய தேசிய பங்குச் சந்தை மற்றும் என்எஸ்இ இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச் ஆகியவை கடந்த ஆண்டில் உலகின் மிகப்பெரிய பங்கு பரிவர்த்தனை குழுவாக மீண்டும் உருவெடுத்துள்ளது. உலக பரிவர்த்தனை கூட்டமைப்பு பராமரிக்கும் புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டில் வர்த்தகங்களின் எண்ணிக்கையில் பங்குப் பிரிவில் என்எஸ்இ 3வது இடத்தில் உள்ளது.
என்எஸ்இ-ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியது, பட்டியலிடப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியது. நிப்டி 50 இன்டெக்ஸ் முதல் முறையாக 20 ஆயிரம் குறியீட்டு அளவைத் தாண்டியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை என்எஸ்இ கடந்த ஆண்டில் படைத்துள்ளது.
இது குறித்து என்எஸ்இ தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரி ஸ்ரீராம் கிருஷ்ணன் கூறுகையில், “ஈக்விட்டி பிரிவில் 3வது இடத்தைப் பெறுவதும், மிகப்பெரிய டெரிவேடிவ் எக்சேஞ்சாக இருப்பதும் உலக வரைபடத்தில் இந்திய மூலதனச் சந்தை சுற்றுச்சூழல் அமைப்பின் வலுவான திறன்களை நிரூபிக்கிறது. இது புதிய முதலீட்டாளர்களை ஈர்க்க உதவுவதோடு, இந்திய சந்தைகளுக்கு நிதி வளர்ச்சிக்கும், மூலதன உருவாக்கத்துக்கும் உதவும். எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்“ என்றார்.