மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள விக்க்ஷித்பாரத் வேலை உறுதி அளிப்பு திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பாஜக நாளை முதல் அனைத்து தொகுதிகளிலும் கூட்டம் நடத்த உள்ளது என்று பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் மற்றும் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறினார்.
ஈரோட்டில் பாஜக விவசாய அணி சார்பில் இரண்டு நாள் விழிப்புணர்வு மாநாடு சம்பந்தமான வேளாண் கண்காட்சியை அவர் நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசு ஏற்கனவே இருந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு பதிலாக 125 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வந்துள்ளது. பல திட்டங்களில் மத்திய மாநில அரசுகள் பங்களிப்பு உள்ளன. அதேபோன்றுதான் இத்திட்டத்திலும் உள்ளது. பழைய திட்டத்தில் போலியான பதிவுகள் செய்யப்பட்டு ஊழல் நடந்துள்ளது. எனவேதான் திட்டத்தை மாற்றி டிஜிட்டல் முறையில் பணிகளை வழங்கவும் வேளாண் தொடர்புடைய நீர்நிலை பாதுகாக்கவும் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
பிரதமர் சம்மான் நிதியின் கீழ் தமிழகத்தில் குறைந்த விவசாயிகள் பலன் பெறுகிறார்கள் என்றால் அதற்கு மாநில அரசுதான் காரணம். மாநில அரசு திட்டங்களை அமலாக்குகிறது. இங்கிருந்து மாநில அரசு அனுப்பிய விவசாயிகள் பட்டியலில் பல குளறுபடிகள் கண்டறியப்பட்டன. ஒழுங்காக மாநில அரசு விவசாயிகளை கண்டறிந்து பட்டியலை அனுப்பினால் அவர்கள் அனைவருக்கும் பலன் கிடைக்கும்.
தமிழகத்தில் தொழிற்சாலைகள் அதிகம். அதனால் அதில் கூலி கிடைக்கிறது என்பதால் இங்கு விவசாயி உற்பத்தி செலவும் அதிகம். விவசாயிகளின் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை முன்பு கரும்பு நெல் போன்றவைகளுக்கு வழங்கப்பட்டது. தற்போது பருப்பு போன்ற பொருள்களுக்கும் பிரதமர் விரிவு படுத்தி உள்ளார். பிரதமர் மேலும் இதை அதிகரிக்கவும் கடன் நிவாரணம் மற்றும் பிரதமர் சம்மான் நிதி உயர்வு சமீபத்திய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் குறித்தும் பரிசீலிப்பார்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்ஷன் திட்டத்தை அரசு ஊழியருக்கு கொண்டு வருவதாக உறுதி அளித்தது. ஆனால் இப்போது செய்திருப்பது வேறு. தொடர்ந்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். பல பள்ளிகள் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை.
தேர்தல் வருவதால் இதை செய்திருக்கிறார்கள். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்வதே வழக்கமாக உள்ளது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற கருத்துக்கணிப்பு எதன் அடிப்படையில் நடத்தப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. நிச்சயமாக தேசியஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி, மாவட்ட தலைவர் செந்தில், விவசாய அணி பொது செயலர் ராமலிங்கம், தமாகா பொது செயலர் யுவராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



