Homeபிற செய்திகள்சித்தோடு அருகே அரசு மாணவியர் விடுதியில் அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு

சித்தோடு அருகே அரசு மாணவியர் விடுதியில் அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு

சித்தோடு அருகேயுள்ள குமிளம்பரப்பு பகுதியில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசு கல்லூரி மாணவியர் விடுதியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அரசு அறிவித்துள்ள உணவுப்பட்டியலின்படி மாணவிகளுக்குத் தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். மேலும், விடுதியின் சுகாதாரம், மின் விளக்கு வசதிகள், சமையலறை பராமரிப்பு, படிப்பறைகள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார். கண்காணிப்பு கேமராக்களின் இயக்கம், விளையாட்டு உபகரணங்கள், முதலுதவிப் பெட்டி மற்றும் புகார் பெட்டிகளின் நிலை குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகளிடம் நேரடியாகக் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களுக்குத் தேவைப்படும் கூடுதல் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய அமைச்சர் சம்பத்குமார், விடுதி வளாகத்தை எப்போதும் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும், முதலுதவிப் பெட்டிகளில் உரிய மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். புகார் பெட்டியில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாகத் துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, ஈரோடு வட்டாட்சியர் கவிதா மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img