கடலூர் மாவட்டத்தில் 3,120 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் பணியை அமைச்சர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரையில் நேற்று முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்ததும், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் தலைமை தாங்கி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் முதற்கட்ட மாக 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி, மாவட்டத் தில் 3,120 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் ராஜ்குமார் கூறுகையில், தாய்மையையும், குழந்தை பிறப்பின் பெருமையையும் உணர்த்துவதுடன்,அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீதுள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்தப்படு கிறது.
இத்திட்டத்தில் 22.6.2026 முதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்து வமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும்
பாலினவேறுபாடின்றி ஒரு கிராம் தங்க மோதிரம் வழங் கப்படுகிறது. 22.6.2026 முதல் தற்போது வரை மாவட்டத் தில் 3,120 குழந்தைகளுக்கு வட்டார வாரியாக தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.
மேலும் 26.9.2026-க்கு பிறகு பிறந்த குழந்தைகளுக்கு அந் தந்த மருத்துவமனைகளில் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா, மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் கிஷன்குமார், கோட்டாட்சியர் சுந்தரராஜன்,மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பிரமிளா, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா,அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் தம்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதையடுத்து சிதம்பரம் அரசு மருத்துவமனை,சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, விருத்தாசலம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் 75 குழந்தைகளுக்கும் முதற் கட்டமாக நேற்று தங்கமோதிரம் வழங்கப்பட்டது.



