இலங்கையில் நடைபெற்ற மலையகத் தமிழர்கள் மாநாட்டில் பங்கேற்க மலையக மக்களின் தலைவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
முதலமைச்சர் உடல்நிலை காரணமாக நேரடியாகச் சென்று அங்கு கலந்துகொள்ள இயலாத நிலையில், அவரது சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவை அனுப்ப ஏற்பாடாகி இருந்தது.
ஆனால், மாநாடு நடைபெறவிருந்த முதல் நாள் இரவு வரை அமைச்சருக்கு இலங்கை செல்ல ஒன்றிய அரசு அனுமதி தராமல் தாமதம் செய்தது. இதனால் அமைச்சர் தங்கம் தென்னரசு கடைசி நேரத்தில் அங்கு செல்ல முடியாத சூழல் உருவானது.
அம்மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரையும் ஒளிபரப்பப்படாத சூழல் உருவாக்கப்பட்டது. இது ஏதோ எதேச்சையாக நடைபெற்றதாகக் கருத முடியாது.
ஒன்றிய அரசு சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். ஆனால், தமிழ்நாடு அமைச்சர் பயணம் தடை பட்டும், முதலமைச்சர் உரை – வாழ்த்தினை அங்கே கூற வேண்டியதைத் தடுத்தும் நடந்ததன் பின்னணியில் யார் இருந்திருப்பார்கள் என்பது வெள்ளிடமலை. இது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இது ஒன்றிய அரசுக்கு அழகாகுமா? பயண அனுமதி வழங்குவதற்கு ஏன் தாமதம்?
இதை சிறுமதி என்பதைத் தவிர வேறு என்ன சமாதானம் கூற முடியும்?. தமிழ்நாடு அமைச்சரவை சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசுவை பங்கேற்கவிடாமல் குறுக்குவழியில் ஒன்றிய அரசு செயல்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்தினை ஒளிபரப்பாமல் செய்ததும் ஒன்றிய அரசின் அற்பத்தனத்தையே வெளிப்படுத்தும். கப்பல் கப்பலாக இலங்கை மக்களுக்கு வேறுபாடு எதையும் கருதாது, அத்தியாவசியப் பொருள்களை அனுப்பியவர் நமது தமிழ்நாட்டு முதலமைச்சர் என்பதை மறைக்க முடியுமா?
மலையகத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குமிடையிலான தொப்புள்கொடி உறவை இத்தகைய செயல்களால் மறைக்க முடியாது.
வரலாற்றை அற்பத்தனங்களால் மறைக்க முடியாது!



