கனமழையால் மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகளை சீரமைக்கும் பணி நிறைவடைந்ததால் மேட்டுப்பாளையம்- உதகை இடையேயான மலை ரயில் சேவை 10 நாட்கள் பிறகு மீண்டும் தொடங்கி உள்ளது.
உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த மலைரயில் கோவை மாவட்டம், மேட்டு ப்பாளையம் ரயில்நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் பெரிதும் கவரும் இம்மலை ரயில் மழை காலங்களில் இதன் இருப்பு பாதையில் ஏற்படும் மண் சரிவுகளால் சரிவர இயங்க இயலாமல் அடிக்கடி தடைபட்டு நிற்பதும் இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைவதும் தொடர் நிகழ்வாகி வருகிறது.
கடந்த 3 ம் தேதி இரவு பெய்த கனமழை காரண மாக மலைரயில் கடந்து செல்லும் மலைப்பாதையில் கல்லார் ரயில் நிலையம் முதல் அடர்லி ரயில் நிலையம் வரை பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டதால் கடந்த 4 ம் தேதி முதல் 7 ம் தேதி வரை என 4 நாட்கள் மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டு கடந்த 8 ம் தேதி மீண்டும் போக்குவரத்து துவங்கியது..
ஆனால் மேட்டுப் பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மலைரயில் பாதையில் மீண்டும் மண்சரிவுகளும் தண்டவாளத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டதால் 9 ம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட மலைரயில் கல்லார் ரயில் நிலையம் வரை சென்று விட்டு மேற்கொண்டு பயணிக்க இயலாமல் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து 10 ம் தேதி முதல் 16 ம் தேதி வரை என 7 நாட்கள் தொடர்ச்சியாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. 17 ம் தேதி மீண்டும் மலை ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீரமைப்பு பணிகள் தாமதமானதால் மேலும் இரு தினங்களுக்கு 18 ம் தேதி வரை இதன் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மலைரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவுகளை சீரமைக்கும் பணி நிறைவடைந்ததால் மேட்டுப்பாளையம்& -உதகை இடையேயான மலைரயில் போக்குவரத்து கடந்த 9 நாட்கள் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டிருந்த மலைரயில் போக்குவரத்து துவங்கியது.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை வழக்கம் போல் காலை 7.10 மணிக்கு உதகை நோக்கி நீலகிரி மலைரயில் புறப்பட்டடு சென்றது.
இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கனமழை பாதிப்பால் இம்மாதம் மட்டும் மொத்தம் 10 நாட்கள் மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



