கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே கல்வி நிறுவனங்கள் சார்பில் கல்லூரி வளாகத்தில் “ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில் சிறப்பு கடல்வாழ் உயிரினக் கண்காட்சி 23.01.2026 முதல் 27.01.2026 நடைபெற உள்ளது. கண்காட்சியை தினமும் காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை இலவசமாக பார்வையிடலாம்.

இக்கண்காட்சியில் டால் பின், திமிங்கலம் மற்றும் கடற் பசு (டுகாங்) ஆகிய அரிய கடல்வாழ் பாலூட்டிகளின் உயர்தர புகைப்படங்கள், நேரடி ஆய்வுகளின் மூலம் பெறப்பட்ட நம்பகமான அறிவியல் தகவல்கள், மெய்நிகர் உண்மை (VR) மூலம் காணக்கூடிய அரிய கடற்பசு காட்சிகள், அவற்றின் வாழ்வியல், உணவுப் பழக்கம், இடம் பெயர்வு, ஒலி தொடர்பு முறைகள் மேலும் அழிவிற்கான காரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிய அரிய புகைப்படங்கள், உண்மை சம்பவங்கள் ஆகியவை பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் காட்சிப் படுத்தப்படவுள்ளன.

இதில் கடற்பசுவின் தன்மைகள், வகைகள், வாழ்வியல் அதிசயங்கள் மற்றும் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இந்தக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி வரலாற்றில் தனித்த இடம் பெற்ற தமிழக விஞ்ஞானி, சுற்றுச்சூழல் போராளி மற்றும் சமூக வழிகாட்டியான மறைந்த ஆர். எஸ். லால் மோகனின் வாழ்க்கைப் பயணம், அறிவியல் சாதனைகள் மற்றும் கடல்வாழ் உயிரின பாதுகாப்புப் பணிகளையும் மையமாகக் கொண்டு இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.



