தமிழ்நாடு முதலமைச் அவர்கள் அனைத்து துறைகளின் வாயிலாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற இலட்சியத்திற்கிணங்க, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் தொடங்க வைத்து, தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் பொருட்டு எண்ணற்ற திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
அதனடிப்படையில், தொழில் வணிகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுய தொழில் தொடங்கி பயன்பெறும் வகையில் புதிய தொழில் முனைவோரை கண்டறிந்து, அவர்களை ஆற்றல் மிக்க தொழில் முனைவோர்களாக உருவாக்கிட வேண்டும் என்ற உயரிய நோக்கில், அவர்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் அளித்து, பல்வேறு திட்டங்களின்கீழ் பயன்பெற செய்து வருகிறார்கள்.
மேலும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், சிறு, குறு கொள்கை திட்டங்கள் ஆகியவற்றின் மூலமாக பயன்பெறுவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்தும், தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான அரசு வழங்கும் அனைத்து மானியங்களை பெற்று பயன்பெறுவதற்கும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், தமிழ்நாடு அரசின் மாபெரும் கனவுத்திட்டமான ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்` நடப்பு நிதியாண்டில் (2023-2024) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கமானது, மாநிலம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்பாடு அடையச் செய்வதாகும்.
சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் அதிகப்படியாக எஸ்.சி மற்றும் எஸ்.டி தொழில் முனைவோர்கள் பங்கேற்று சுயமாக தொழில்களை துவங்கவும் மற்றும் ஏற்கனவே துவங்கிய தொழில்களை விரிவாக்கம் செய்யவும் 35 சதவீத மானியத்துடன் கூடிய இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் மூலம் தகுதியும், ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரத் தொழில்கள் துவங்க விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தின் கீழ் தேயிலை தொழிற்சாலை, பேக்கரி பொருட்கள் தயாரித்தல், சாக்லெட் தயாரித்தல், சணல் பைகள் தயாரித்தல், அறைக்கலன்கள் தயாரித்தல், காரட் கழுவும் இயத்திரம் அமைத்தல், உடற்பயிற்சி கூடம், ஆட்டோ மொபைல் பழுது நீக்கும் மையம், ஆட்டோ மொபைல் வீல் அலைன்மெண்ட் மையம், அழகு நிலையம், கான்கிரீட் மிக்சர், ஆம்புலன்ஸ், வாடகை வாகனம், மீட்பு வாகனம், மொபைல் கிரேன், மொபைல் கேட்டரிங், டிப்பர் லாரி மற்றும் வியாபாரத் தொழில்களுக்கு கடன் பெறலாம்.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம், 2023-2024ஆம் ஆண்டில் 63 விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடன் வசதிக்காக வங்கிகளுக்கு அனுப்பட்டுள்ளது. இதில் 13 தொழில் முனைவோர்களுக்கு மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் ரூ.1.05 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் மானியத்துடன் கூடிய கடன் பெற்று பயனடைந்த ராகுல் கூறியதாவது:
நான் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வசித்து வருகிறேன். சுயமாக தொழில் துவங்கும் ஆர்வத்தின் பேரில் மாவட்ட தொழில் மையத்தை அணுகிய போது, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்து தெரிவித்தார்கள். பின்னர் அவர்கள் தெரிவித்த வழிகாட்டுதலின்படி, இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பம் அளித்தேன். அதன்படி எனக்கு ரூ.12.60 இலட்சம் மானியத்துடன் ரூ.44 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் தொழில் துவங்க கடன் உதவிகள் வழங்கப்பட்டது. தற்பொழுது கடன் தொகை பெற்று டிப்பர் லாரி மூலம் தொழில் செய்து வருகிறேன்.
இத்தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொழிலில் வரும் வருமானத்தின் மூலம் கடன் தொகையினை மாதந்தோறும் வங்கியில் செலுத்தி வருகிறேன். மேலும், எனது வாழ்வாதாரம் இதன் மூலம் உயர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை போன்ற இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றி பிறருக்கு வேலை வாய்ப்பளித்து உதவ வேண்டும் என்பதற்காக இதுபோன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்ட தொழில் மையத்தின் சார;பில் மானியத்துடன் கூடிய கடன் பெற்று பயனடைந்த ராஜ்குமார் கூறுகையில், நான் உதகை பகுதியில் வசித்து வருகிறேன். கட்டிடவியல் தொழில் நுட்பம் பயின்று தனியார் துறையில் வேலை புரிந்து வந்தேன். நான் பெற்ற போதிய தொழில் அனுபவத்தின் மூலம் சுயமாக தொழில் துவங்கும் முயற்சியால் மாவட்ட தொழில் மையத்தைத் தொடர்பு கொண்டேன். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்து விரிவாக தெரிவித்தார்கள்.
இத்திட்டம் குறித்து நான் முழுமையாக தெரிந்துகொண்டு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பம் அளித்தேன். அதன் மூலம் சிவில் காண்டிரேக்டர் தொழில் துவங்க ரூ.26.13 இலட்சம் மானியத் தொகையுடன் ரூ.76 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் கடன் உதவி பெற்று, கான்கிரிட் கலவை இயந்திரம் மற்றும் சரக்கு வாகனம் வாங்கி தொழில் செய்து வருகிறேன். தற்போது சிறப்பாக தொழில் செய்து மாதந்தோறும் கடன் செலுத்தி வருகிறேன். சுயதொழில் செய்து தொழில் முனைவோராக என்னை மாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி, என தெரிவித்தார்.
குறிப்பாக, வேலைநாடுவோர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமும், புதிய தொழில் துவங்குவதற்கு மாவட்ட தொழில் மையத்தின் மூலமும் பல்வேறு திட்டங்களின் வாயிலாக கடனுதவிகள் வழங்கப்பட்டு, அவர்களது பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் உயர்த்தும் அரசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இதுபோன்ற பல்வேறு துகைளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் வாயிலாக பயன்பெற்ற நபர்கள் முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
தொகுப்பு:
ஜி.சையத் முகம்மத்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
இரா.சரண்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
நீலகிரி மாவட்டம்.



