தீபாவளி, வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் விழாக்கள், அரசியல் கட்சியினரின் வெற்றிக் கொண்டாட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளின்போது நாம் பட்டாசு வெடித்து மகிழ்வதற்காக ஏராளமான இன்னுயிர்கள் தொடர்ந்து பலியாகி வருவது வருத்தத்துக்கு உரியதாகும்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் மே 9 அன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்திருப்பது வர்ணிக்க இயலாத பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற விபத்துகள் தமிழகத்திலும், மற்ற மாநிலங்களிலும் தொடர் நிகழ்வாகவே உள்ளன.
தமிழகத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கிவருகின்றன. இவற்றில் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இதில் கணிசமான எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தாங்கள் வருவாய் ஈட்டினால்தான் உணவுக்கே வழி என்பதால்தான் ஏழை எளிய மக்கள் உயிரைப் பணயம்வைத்து இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர். வெடிவிபத்துகளின்போது உயிரிழப்பவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியாகின்றன. உயிரிழப்பவர்கள் ஒருபுறம் என்றால் காயமடைந்தவர்களின் நிலை மிகவும் பரிதாபம். வாழ்நாள் முழுதும் உடல்ரீதியான பாதிப்பு என்ற வேதனையை சுமக்கின்றனர்.
பட்டாசு ஆலை அமைக்க உரிமம் பெறுபவர்கள் அறைகளை சட்டவிரோதமாக உள்வாடகைக்கு விடுதல், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக ரசாயனப் பொருள்களை இருப்பு வைத்தல், ஒரு குறிப்பிட்ட இடத்தில் அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதல் தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்துதல், தேவையான அளவுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இருத்தல் போன்ற விதிமீறல்களைக் கட்டுப்படுத்தினாலே ஓரளவுக்கு இதுபோன்ற விபத்துகள் குறையும்.
இதுபோன்ற வெடிவிபத்துகள் நடக்கும்போது, இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக சில லட்சம் ரூபாயை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவிக்கின்றனர். அத்துடன் இதுபோன்ற சம்பவங்கள் மறக்கப்படுகின்றன.
ஒவ்வொரு விபத்தின்போதும் உடனடியாக ஆய்வு மேற்கொள்ளும் அரசு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஆலை விதிமுறைகளை மீறி செயல்பட்டது என்றும் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்றும் கூறுவதும் தொடர்கிறது.
தற்போது தமிழ்நாடு அரசு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் விதிகளை மீறி பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் ஆலைகளைக் கண்டறிய நான்கு சிறப்பு நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும், அந்தக் குழுக்கள் ஆய்வு செய்து தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் விதிமீறும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தீபாவளி வரை சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலைகளில் விரைந்து சோதனை நடத்தப்பட்டு விதிமீறல்கள் இருந்தால் உரிமத்தை ரத்து செய்வது, குறிப்பிட்ட காலகட்டத்தில் முறையாக ஆய்வு மேற்கொள்ளாத அரசு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை போன்றவை மூலம் வெடிவிபத்துகளை கணிசமாக குறைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். இதில் சமரசத்திற்கே இடமின்றி நடவடிக்கைகள் தொய்வின்றி தொடர வேண்டும். அப்போது தான் பட்டாசு வெடிவிபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் இன்னுயிர்களைக் காப்பது ஆலை உரிமையாளர்கள், அரசின் கடமையாகும்!