கோவை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா, வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமை தாங்கி பேசினார். பொருளாளர் மருத்துவர் ஓ.என் பரமசிவன் முன்னிலை வகித்தார்.
முதல்வர் முனைவர் மா. லச்சுமணசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.
மாணவர் பேரவைத் தலைவர் கே. ரக்ஷயாதேவி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் சென்னை, இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் வி. காம கோடி பேசியதாவது: நாட்டில் ஏற்படுகிற நன்மை உலகத்துக்கே நன்மையாக முடியும். கொரோனா பெருந் தொற்றுக் காலத்தில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகள் உலகின் பல நாடுகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டன.
ஆரோக்கிய சேது
பல்வேறு இடர்பாடுகளை எதிர் கொண்டு நாடு இன்று முன்னேறி வருகிறது. இந்திய மக்களின் அறிவைப் பெருந்தொற்றுக் காலத்தில் உலகம் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. 21 நாட்களில் அறிவியல் அறிஞர்கள், மருத்துவர்கள், பொருளாதார நிபுணர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து ஆரோக்கிய சேது என்ற செயலியை வடிவமைத்தனர்.
சுமார் 20கோடி இந்தியர்கள் அந்த செயலியால் பயன் பெற்றனர். இந்திய வங்கிகள் நிலைத்த வளர்ச்சியுடன் உள்ளன. 2047-ம் ஆண்டு பாரதம் நூறாவது சுதந்திர நாளைக் கொண்டாட உள்ளது. அடுத்த 25 ஆண்டுகள் முக்கியமானவை.
இளைஞர்கள் மிகுதியாக உள்ள நம் நாட்டில் பண்பாடு, மனிதநேயம் ஆகியவற்றை வளப்படுத்துகிற கல்வி முறை அவசியம். தகவல் அறிவியல் துறையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
அது நமக்குப் புதியதல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வானியல் குறித்த தகவலை அறிய பஞ்சாங்கம் பார்க்கும் அறிவு நம் முன்னோர்களுக்கு இருந்தது. அந்த அறிவின் தொடர்ச்சி நம் ஒவ்வொரு வருடைய மரபணுவிலும் உள்ளது என்றார்.
முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் சிறந்த துறை, சிறந்த ஆராய்ச்சித்துறை ஆகியவற்றுக்கான சுழற்கோப்பைகளையும் சிறப்பு விருந்தினர் வழங்கினார். மாணவர் பேரவை செயலர் ஜி. அஸ்வின் நன்றி கூறினார்.



