ஈரோட்டில் கவிதாலயம் இசைப்பள்ளி கடந்த 25 ஆண்டுகளாக பரதநாட்டியத்தை ஊக்கு வித்து ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது. புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் பாலச்சந்தர் தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு கவிதாலயம் என பெயரிட்டார்.
அவரை போற்றும் வகையில் ஈரோட்டைச் சேர்ந்த ராமலிங்கம் கவிதாலயம் என்ற பெயரில் ஒரு கலை பிரிவை உருவாக்கினார். முதலில் மாதந்தோறும் ஒரு நாடகம் அல்லது நாட்டியம் ஈரோடு மக்கள் கண்டு களிக்க அவர் ஏற்பாடு செய்தார்.
இது நாளடைவில் இசைப் பள்ளியாக உரு வெடுத்தது. ஈரோடு அம்மன் (முன்பு இந்து பள்ளி) மெட்ரிக் பள்ளி யில் பரதம் கர்நாடக வாய்ப்பாட்டு ஓவியம் வீணை மேல்நாட்டு நடனம் போன்றவைகளை சொல்லித் தரப்படுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமை மாலை ஞாயிறு முற்பகல் ஏராளமான மாணவ மாணவிகள் கற்கின்றனர். இதற்காக பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளியில் இருந்து சிறப்பாசிரியர்கள் வந்து இக்கலைகளை பயிற்றுவிக்கின்றனர்.
இது குறித்து ராமலிங்கம் கூறியதாவது: இதுவரை 25க்கும் மேற்பட்ட அரங்கேற்ற நிகழ்ச்சிகள் பள்ளி சார்பில் நடத்தப்பட்டுள்ளது. ஏராளமான மாணவிகள் பரதநாட்டியத்தை கற்றுள்ளனர்.
ஈரோட்டில் மிக குறைந்த கட்டணமான ரூ.200 இல் இக்கலைகள் சொல்லித் தரப்படுகின்றன. இங்கு பயின்ற பல மாணவிகள் தனியாக நாட்டிய பள்ளிகள் நடத்தி வருகிறார்கள். பல்கலைக் கழகங்களின் பரத நாட்டிய படிப்புக்கு தரும் அதே தரம் இங்கும் உள்ளது. இதற்காக சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றார்.
பரதநாட்டிய ஆசிரியை அகிலா திருமணமாகி ஆசிரியராக இங்கு பணியாற்றுகிறார். ஸ்வேதா விஐடி ஐஏஎஸ் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். இருவரும் இங்கு பயின்றவர்கள்.
“சுமார் 10 ஆண்டுகள் பரதநாட்டியத்தில் முழுமையாக தேர்ச்சி பெற தேவை. ஆர்வம் இருந்தால் எளிதில் இதை கற்றுக் கொள்ளலாம். 12 அடவுகளும் கற்றுத் தரப்படுகிறது.
இதை அடுத்து சலங்கை பூஜை நாட்டியாஞ்சலி மற்றும் அரங்கேற்றம் நடத்தப் படுகிறது. மாணவிகள் தனியாக நாட்டிய பள்ளி, நிகழ்ச்சிகள் நடத்தலாம் திரைப்படத் துறைக்கும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் பரதம் முக்கியமான ஒன்றாகும்“, என்றார்.
பரதம் ஆசிரியைகள் தேவிகா மற்றும் லத்திகா ஆர்ஏஎன்எம், கொங்கு கலைக்கல்லூரி மாணவிகள் கூறியதாவது: பரதநாட்டியம் ஒருவரின் ஞாபக சக்தியையும் அறிவு திறனையும் அதிகரிக்கும். இதனால் படிப்பில் மேலும் பிரகாசிப்பார்கள். இக்கலை உடல் மனம் பக்தி சார்ந்த ஒரு தியான பயிற்சியாக கொள்ளலாம் என்றார்கள்.



