fbpx
Homeபிற செய்திகள்கருணாநிதி பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்

கருணாநிதி பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்

தேனி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தேனி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் ஓட்டல் கூட்ட அரங்கில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு தேனி வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் செல்ல பாண்டியன் மற்றும் தேனி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் மனோகரன் தலைமை வகித்தனர்.

எம்எல்ஏக்கள் ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணகுமார், திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், தீர்மான குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார் ,கொள்கை பரப்பு இணைச் செயலாளர் கம்பம் பாண்டியன், நெசவாளர் அணி துணை செயலாளர் ராமசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் ஆசையன், லட்சுமணன் முன்னிலை வகித்தனர்.

செயற்குழுக் கூட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் கம்பம் தொகுதி எம்எல்ஏ வுமான கம்பம் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தின் போது வருகிற ஜூன் 3- ம் தேதி கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், வருகிற ஜூன் 4 – ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள் செயல்படும் விதம் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது,50 ஆண்டுகாலம் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து மக்களுக்கான சேவை செய்த தலைவர் கலைஞர் போல வேறு எந்த ஒரு தலைவரும் இருக்க முடியாது.

அண்ணா போல் பேச நினைத்தவர்கள் உண்டு. அண்ணா போல் எழுத நினைத்தவர்கள் உண்டு. ஆனால் அதனை செய்து காட்டியவர் கலைஞர். கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு நாளின் போது கழக நிர்வாகிகள் அனைவரும் பொதுமக்கள் பயனுரும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்திட வேண்டும்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 40க்கு 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி முழு வெற்றியை அடைந்து சாதனை படைக்க உள்ளது .இதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த மூன்று ஆண்டு காலமாக செய்த சாதனை அவரது உழைப்பு காரணமாக உள்ளது .

நாடாளுமன்றத் தேர்தலில் பணி செய்தது போல வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற நாம் பாடுபட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் பேசும்போது, கலைஞர் கருணாநிதி கலை, இலக்கியம், , எழுத்து, ஆட்சி நிர்வாகம் என அனைத்து துறையிலும் தனி முத்திரை பதித்தவர். இந்தியாவில் பல பிரதமர்களையும், ஜனாதிபதிகளையும் உருவாக்கியவர்.

ஜனநாயகத்திற்கு எப்போதெல்லாம் ஆபத்து ஏற்பட்டதோ அப்போதெல்லாம் அதற்காக வலிமையாக போராடியவர். அத்தகைய பெருமைக்குரிய கலைஞரின் பிறந்த நாளன்று பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.

கூட்ட முடிவில் தேனி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.
கூட்டத்தில் தேனி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய ,பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img