மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை சமுதாய நலக்கூடத்தில் கர்ப்ப கால பாதுகாப்பு மற்றும் தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து கர்ப்பிணிகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் ரோட்டரி சங்கம் சார்பில் அதன் தலைவர் மகேஷ், அவினாசி ரோட்டரி கிழக்கு சங்கத்தலைவர் லிங்கேஷ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் தாய்பால் ஆலோசகர் அங்கு லட்சுமி, அவிநாசி இன்னர் வீல் சங்க தலைவர் விசித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நோய் எதிர்ப்பு சக்தி
அப்போது, தாய்ப்பால் ஆலோசகர் அங்குலட்சுமி கர்ப்பிணிகளிடையே உரையாற்றினார். அவர் பேசியதாவது: பிறந்த குழந்தைக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அப்பொழுது, தான் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
தாய்ப்பால் கொடுக்க தயங்க வேண்டாம். தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தங்களது அழகு குறைந்து விடும் என நினைத்து வருகிறார்கள். அது முற்றிலும் தவறு. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் காரமடை வட்டார மருத்துவ அலுவலர் சுதாகர், துணை ஆளுநர் சிவசதீஷ்குமார், முன்னாள் ரோட்டரி சங்கத்தலைவர் ஞானசேகரன்,ரோட்டரி சங்க செயலாளர் சதீஷ்குமார், நிர்வாகிகள் கங்கா பழனிச்சாமி, சரவணன், காரமடை வட்டாரத்தில் உள்ள 6 அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள்,கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் காரமடை ரோட்டரி சங்கத்தின் சார்பாக அன்னபூரணி மதிய உணவுத்திட்டத்தின் கீழ் 87 ஆவது வாரமாக கர்ப்பிணி பெண்களுக்கு சத்து நிறைந்த மதிய உணவு 150 பேருக்கு வழங்கப்பட்டது.