கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக திங்கட்கிழமை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கல்குவாரி உரிமையாளர் சங்க மாநில தலைவர் சின்னசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல் கல்குவாரி உரிமையாளர்கள் 15 கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையரைற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சின்னசாமி கோவை மாவட்டம், சூலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
“மேஜர் மினரலுக்கு உண்டான சட்ட திட்டங்களை மைனர் மினரல் என்றழைக்கப்படும் கல், ஜல்லி உடைக்கும் சிறு தொழில்களுக்கு அமல்படுத்திய காரணத்தால் குவாரிகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. அதன் காரணமாக தொழிலை தொடர முடியாத நிலை உருவாகியுள்ளது. சிலர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் என்ற போர்வையில் எங்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
அடிப்படையில் நாங்கள் விவசாயிகள் என்பதால் உண்மையான விவசாயிகள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். கனிமவள கடத்தல், கனிம வளக் கொள்ளை என ஊடகங்களில் செய்திகள் வருவதால் எங்கள் தொழில் பாதிப்படைகிறது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இது போன்ற பிரச்னைகள் வந்ததில்லை. தற்போது புதிதாக பல்வேறு விதமான சட்ட திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.
குவாரிகளுக்கு கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படுகிறது. இதனால் சிறிய கல்குவாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, எங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜூன் 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.
தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களது கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு பலமுறை நிறைவேற்றி உள்ளது. அதைப்போல இந்த முறையும் எங்களது கோரிக்கைகளை அரசு விரைவில் நிறைவேற்றும் என்று நம்புகிறோம். சட்ட விரோதமாக கல்குவாரி செயல்பட்டால் அவர்களுக்கு எங்கள் ஆதரவு கிடையாது. மாதம் மாதம் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி கொடுக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு 2016ஆம் ஆண்டுக்குப் பின் கொண்டு வந்த விதிமுறைகளை தவிர்க்க வேண்டும். கனிம வளங்களை சற்று கூடுதலாக எடுப்பதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு ட்ரான்சிட் பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். தற்போது சில பாறைகளுக்கு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த குவாரிகள் 20, 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. தற்போது திடீரென அபராதம் விதிப்பது ஏற்கத்தக்கதல்ல என தெரிவித்தார். தமிழ்நாடு அரசுக்கு 15 கோரிக்கைகளை வைத்துள்ளோம். அதற்கு சுமூகமான, நியாயமான தீர்வு காண வேண்டும். திங்கட்கிழமை அன்று அரசு தரப்புடன் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.
அமைச்சர் பெருமக்களை சந்திக்க இயலாவிட்டால் அதிகாரிகளிடம் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்துவோம். பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு எங்களது கோரிக்கைகளை பரிசீலித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.