திருப்பூர் மாவட்டத்தில் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் கீழ் 7255 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, இல்லம் தேடிக் கல்வி மையங்களின் சார் பில் 1,21,311 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் கொங்கணகிரி, துவாரகை நகர் பகுதி களில் நடைபெற்றுவரும் இல்லம் தேடி கல்வி மையத்தினை ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத், செய்தியாளர் பயணத்தின்போது ஆய்வு செய்தார்.
ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு ஏற்படும் கற்றல் இடைவெளியை சரி செய்யும் பொருட்டு, அரசால் கலைக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டத்திற்கு 13 கலைக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
கலைக்குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாள் உண்டு உறைவிடப் பயிற்சி அருள்புரத்தில் உள்ள ஜெயந்தி கல்வியியல் கல்லூரியில் வழங்கப்பட்டது. தன் னார்வலர்களை கண்டறிவதற்கான கலைக்குழு பயணம் 25-11-21 அன்று துவக்கி வைக்கப்பட்டது.
அன்று முதல் அனைத்து ஒன்றியங்களிலும் தன்னார்வலர்கள் பதிவு செய்யப்படாத குடியிருப்புகள் கண்டறியப்பட்டு 13 கலைக் குழுக்களின் வழியாக நாள் ஒன்றுக்கு 2 பள்ளிகள் மற்றும் 2 குடியிருப்புகள் வீதம் மொத்தம் நான்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் 31-12-2021 வரை 35 நாட்கள் கலைப்பயணம் மேற்கொள்ளப்பட்டு தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டனர்.
அவர்களுக்கு பயிற்சி அளிக்க மாவட்ட கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்பட்டது. தன்னார்வலர் களுக்கானப் பயிற்சி, மாவட்ட கருத்தாளர்கள் மூலம் ஒவ்வொரு ஒன்றியங்களிலும் இரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது.
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் பதிவு செய்த 19,354 தன்னார்வலர்களில், 7255 பேர் தேர்வு செய்யப்பட்டு, இல்லம் தேடிக் கல்வி மையங்கள் திறக்கப்பட்டன.
இத்திட்டத்தின் மூலம் 1,21,311 மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். மற்ற மாணவர்களையும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் ஒருங்கிணைக்கும் பணி நடை பெற்று வருகிறது.
பிப்ரவரி மாதத்தில் இரண்டாம் கட்ட பயிற்சியின் போது, தன்னார்வலர்களின் படைப் புகளைக் கொண்டு கற்றல் கற் பித்தல் உபகரணங்கள் கண்காட்சி நடந்தது. இதில் தன்னார்வலர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
சுதந்திர தின அமுதப் பெருவிழா கண்காட்சி
பல்லடம் ஒன்றியத்தில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா கண்காட்சியில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
தன்னார்வலர்களுக்கு உரிய கையேடுகள் மற்றும் கற்றல், கற்பித்தல் உபகரண அட்டைகள் வழங்கி, தொடர்ச்சியான பயிற்சி மற்றும் கண்காணித்தல் மூலம் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
இதுவரை நான்கு கட்டங்களாக இல்லம் தேடிக் கல்வி தொடக்க நிலை மையங்களில் பயின்று வரும் மாணவர்களில், அரும்பு நிலை மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்குவதற்கு ஏதுவாக, தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அவர்கள் மூலம் மாணவர்களும் நன்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவ்வாறு ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் தெரிவித்தார். ஆய்வின்போது, வட்டாரக் கல்வி அலுவலர் முஸரக் பேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



