fbpx
Homeபிற செய்திகள்41 பேர் உயிரிழப்புக்கு நடிகர் தான் பொறுப்பு!

41 பேர் உயிரிழப்புக்கு நடிகர் தான் பொறுப்பு!

விஜய்யின் பேரணிகள் ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அவரது பேரணிகளில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் முன்பு எச்சரித்திருந்தது. பேரணியின்போது யாராவது உயிரிழந்தால் யார் பொறுப்பு? என்றும் கேள்வி எழுப்பியது.

காவல்துறையின் நிபந்தனைகளை மீறக்கூடாது. அனைத்து கட்சிகளின் அரசியல் பேரணிகளுக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பு விதிகளை வழங்க நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தது.


கரூரில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதா? என இப்போது கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் அறிக்கை கோரியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியும் அறிக்கை கேட்டிருக்கிறார்.


கரூரில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட பேரணியில் விஜய் உரையாற்றினார். அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருகைக்கு விஜய்யைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் ஒரு காரணம். அதனால்தான் ஏராளமான இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். நிகழ்வு மாலை 7 மணியளவில் தொடங்கிய போதிலும், காலை 11 மணிக்கே மக்கள் கூடத் தொடங்கினர்.


இன்னும் கூட்டம் வரவேண்டும் என காலம் கடந்து விஜய் போனது ஏன்? சனிக்கிழமைகளில் பரப்புரைக்கு திட்டமிட்டதற்கு விடுமுறையில் கூட்டம் கூடும் என்பதால் தானே.


அப்படியானால், குறித்த நேரத்தில் விஜய் வராமல் அரை மணி நேரம் அல்ல, ஒரு மணி நேரமல்ல, சுமார் 7 மணி நேரம் தாமதமாக போனதற்கு யார் காரணம்?
இந்த நிகழ்வில் 10,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும், அந்த எண்ணிக்கையை விட அதிகமானோர் அதாவது சுமார் 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மக்கள் மூச்சு விடுவதில் சிரமப்பட்டதால், பலர் மயக்கமடைந்தனர். அதனையடுத்து கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 100 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


வாழும் தலைமுறை குறித்தும், அவர்களின் உயிர் பாதுகாப்புக் குறித்தும், அக்கறை கொள்ளாத ஒருவர், எதிர்காலத் தலைமுறைக்கும், எந்த நன்மையும் செய்துவிட முடியாது என்பதே உண்மை.


உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் சிந்தியக் கண்ணீரும், மரண ஓலங்களும், அழுகுரல்களும், நாட்டு மக்கள் அனைவருக்கும் அதிகமான மன வலியையும், வேதனையையும் தந்திருக்கிறது.


இத்தகைய ரோடு ஷோ பரப்புரைகள், அரசியல் ஆடம்பரத்துக்காக நடத்தப்படலாம். ஆனால், அதற்காகப் பொதுமக்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. மக்களின் உயிரைப் பறிக்கும் சினிமாத்தனமான அரசியலை, எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.


எதிர்காலத்தில் நடைபெறும் அரசியல் கூட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும், தகுந்த பாதுகாப்புகளோடு, உயிராபத்து ஏற்படாத வண்ணம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


எதிர்காலத்தில் பெரிய மைதானம் போன்ற இடத்தில் மட்டும் தான் விஜய் போன்ற மக்கள் அதிகம் கூடும் தலைவர்களின் பிரச்சாரத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும் என்பதையும் கரூர் சம்பவம் உணர்த்துகிறது.


என்ன தான் காரணங்களை சொன்னாலும் இத்தனை குளறுபடிகளுக்கும், 41 பேர் உயிரிழப்புக்கும் முதலில் பொறுப்பேற்க வேண்டியது விஜய் தான். ஆனால் பொறுப்பேற்க மாட்டார் விஜய். ஏனென்றால் ஏதோ அரசியல் சதி நடந்திருப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறாரே?


உயர்நீதிமன்றம் எச்சரிக்கையை உதாசீனப்படுத்தியதால் தான் கரூர் சம்பவம் அரங்கேறி உள்ளது. உயிரிழப்பு சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசு, அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் ஆணையம் அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
அதே நேரத்தில், உயர்நீதிமன்றமும் சுயாதீனமான விசாரணையை மேற்கொண்டு, இதுபோன்றதொரு சம்பவம் மீண்டும் எங்கும் நடந்து விடக்கூடாது என்ற உத்தரவாதம் தரும் நடவடிக்கையை முன்னெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.


எதிர்பாராத வகையில் நடந்த விபத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். இவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தும் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதால், இனி எந்த அரசியல் கட்சிக்கும் ‘ரோடு ஷோ’ போன்ற பிரச்சாரங்களுக்கு கண்டிப்பாக அனுமதி வழங்கக் கூடாது.


அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்கள் மூலமாக மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். சாமானியர்களின் உயிரைப் பணயம் வைக்கும் விஷப் பரீட்சையை மீண்டும் முயற்சிக்க வேண்டாம் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


அப்பாவி மக்களின் உயிர்களோடு விளையாடும் ரோடு ஷோ போன்ற பிரசார முறையை இனியாவது அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தவிர்ப்பார்களா?

படிக்க வேண்டும்

spot_img