ஈரோடு சி.டி. பில்டிங் ஹாலில், மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சார்பில் அனைவருக்கும் நிதிசார் சேவை முகாம் நடைபெற்றது. வங்கியின் முதன்மை பொதுமேலாளர் கே.ஏ.சிந்து, பிராந்திய அலுவலக தலைவர் ஜி.சரவணன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றி, வங்கியின் பல்வேறு சேவைத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
இந்த முகாமில், மாணாக்கர்களுக்கு கனரா வித்யா ஜோதி திட்ட கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்கப் பட்டது. அதனை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர் பித் ஜெயின், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார் ஆகியோர் வழங்கி உரையாற்றினர்.
முகாமில் வங்கியின் மண்டல மேலாளர் சபால் எஸ்.சத்யன், முன்னோடி வங்கி மேலாளர் விவேகானந்த், நிதிசார் பிரிவு பொறுப்பு அலுவலர் எஸ்.யாழினி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
மேலும் இம்முகாமில் பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா சேமிப்பு கணக்கு(PMJDY) தொடங்குதல், செயல் இழந்த ஜன் தன் போஜனா சேமிப்பு கணக்குகளைப் புதுப்பித்தல், ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு, ஓய்வூதியத் திட்டம் பதிவு செய்தல் போன்ற சேவைகளும் வழங்கப்பட்டது.
அதோடு ரூ.436 ஆண்டு பிரிமியத்தில் ரூ.2 லட்சம் வரை ஆயுள் காப்பீடு தரும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, 20 ரூபாய் ஆண்டு பிரிமியத்தில் ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு தரும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை ஓய்வூதியம் தரும் அடல் பென்ஷன் யோஜனா போன்ற திட்டங்கள் குறித்தும் வங்கி அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முகாமில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் சுமார் 250
வாடிக்கையாளர்களும் பங்கேற்று பயனடைந்தனர்.



