fbpx
Homeபிற செய்திகள்ஓபிஎஸ் - இபிஎஸ்: பாஜக போடுவது என்ன கணக்கு?

ஓபிஎஸ் – இபிஎஸ்: பாஜக போடுவது என்ன கணக்கு?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்து வந்த நிலையில், ஒரே நாளில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தங்கள் அணிகளின் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

பாஜகவின் முடிவுக்காக இருவரும் இத்தனை நாட்களாக தாமதித்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிரடி முடிவை எடுப்பதற்கு பின்னால் இருக்கும் கணக்குகள் என்ன?

ஈரோடு கிழக்கு இல்லாமல் டெல்டா மாவட்டத்திலோ, தென் மாவட்டங்களிலோ இடைத்தேர்தல் நடந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டியிருக்க மாட்டார். இப்போது ஓபிஎஸ் எப்படி இதில் இருந்து விலகுவதற்கு யோசித்து வருவது போல ஈபிஎஸ்ஸும் யோசித்திருப்பார்.

இப்போது அவருக்கு பலமான ஏரியாவில் இடைத்தேர்தல் வந்துள்ளது. அதிமுகவில் நிலவும் ஓபிஎஸ் உடனான போட்டியில், தனக்கு தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக களத்தில் தீவிரமாக நிற்கிறார். இரட்டை இலை இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று நிற்கிறார்.

எடப்பாடி பழனிசாமியின் கணக்கு, வெற்றி பெறுவது அல்ல, தான் தான் அதிமுக என நிரூபிப்பதற்காகத்தான். அதற்கேற்ற வகையில் வலுவான வேட்பாளரையே ஈபிஎஸ் களமிறக்கியுள்ளார்.

இந்த நிலையில் பாஜக என்ன செய்யப்போகிறது? யாருக்கும் ஆதரவு தராமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கவேண்டும். இருவரில் ஒருவரை ஆதரிக்க வேண்டும். பாஜக போட்டியிடுவதாக அறிவிக்க வேண்டும்.

இரட்டை இலை சின்னம் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவு என்று சொல்ல வேண்டும். இந்த நான்கில் ஏதேனும் ஒன்றைத் தான் பாஜக செய்தாக வேண்டும்.

இரட்டை இலை சின்னம் என்பதில் பிரச்சனை இருக்கிறது. யாராவது ஒருவருக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டால் அது உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கின் முடிவையே பாதிக்கும். அதனால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று கூறப்படவே வாய்ப்பு அதிகம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி அமைத்துள்ள பணிமனையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தை உத்தேசித்து தேசிய ஜனநாயக கூட்டணி என்றில்லாமல் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் அந்த பேனரில் மோடி படம் எங்குமே இல்லை.

பாஜக இந்த இடைத்தேர்தலில் நின்றால், எடப்பாடி பழனிசாமி தனது தரப்பு வேட்பாளருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரை பயன்படுத்த முடியாது. ஏனெனில் அது பாஜக தலைமையிலான கூட்டணி.

அதனால் தான் அந்த கூட்டணி பெயரில் ஒரு வார்த்தையை சேர்த்திருக்கிறார். பாஜகவை நேரடியாக பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் ஈபிஎஸ்.

விரைவில் அதிமுக மோதல் பிரச்சனை முடிவுக்கு வந்து கட்சி யாரிடம் இருக்கப்போகிறது என்று தெரிந்துவிடும். அதனால், இந்த இடைத்தேர்தலில் தனியாக ஒரு கேமை ஆடுகிறார் எடப்பாடி பழனிசாமி.

இப்போது என் சண்டை ஓபிஎஸ் உடன் தான், நீங்கள் தலையிட தேவையில்லை என்பதுதான் எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு சொல்லும் சேதி.

பாஜகவை பொறுத்தவரை அண்ணாமலை எடப்பாடியை ஆதரிக்க விரும்பினாலும், மேலிடம் சொன்னால் தான் ஆதரிக்க முடியும். ஆனால், மேலிடத்தில் ஓபிஎஸ் மீது தான் நல்ல அபிமானம் இருக்கிறது.

கொங்கு மண்டலத்திற்காக எடப்பாடியை ஆதரிக்க முடிவெடுத்தால், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓபிஎஸ் ஆதரவு நமக்குத் தேவை. இந்த இடைத் தேர்தலில் எடப்பாடிக்கு பலம் அதிகம் என்று அவரை ஆதரித்துவிட்டு, ஓபிஎஸ்ஸை ஏன் பகைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறது பாஜக மேலிடம்.

எனவே, இந்த இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளித்து நம் நிலைப்பாட்டை காட்டிக்கொள்ள வேண்டாம், அவர்கள் இருவரும் பஞ்சாயத்தை தீர்த்துக்கொண்டு வரட்டும், இப்போதைக்கு யாருக்கும் ஆதரவு அளிக்க வேண்டாம் என பாஜக நினைப்பதாகவே தெரிகிறது.

ஒருவேளை பாஜக தன் வேட்பாளரை அறிவிக்கும் பட்சத்தில் ஓபிஎஸ் தன் வேட்பாளரை வாபஸ் பெற்றுவிடுவார். ஆனால், இபிஎஸ் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல, பாஜக போட்டியிடாமல் இபிஎஸ் தரப்பு வேட்பாளரை ஆதரிக்கும் பட்சத்தில் ஓபிஎஸ்-சின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் பாஜக, ஓபிஎஸ் தரப்பை ஆதரித்தால் இபிஎஸ் தரப்பின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு இபிஎஸ் தரப்புக்கு சாதகமாக வந்தால் அதிமுக-பாஜக கூட்டணியின் நிலை என்ன என்பது குறித்து கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டு அரசியல் சுழலில் என்னதான் நடக்கப்போகிறதோ, தெரியவில்லை.
ஓரிரு நாட்கள் பொறுத்திருப்போம்!

படிக்க வேண்டும்

spot_img